Sunday, December 27, 2009

நாட்டி நிலா

கொஞ்சியவர்கள் (24)
நிலாவைப் பற்றி யாராவது விசாரித்தாலே நான் சொல்லும் பதில் “நாளுக்கு நாள் வாலுத்தனம் அதிகம் ஆகிட்டு இருக்கு” என்பதாகவே இருக்கும். அவளது ஒவ்வொரு வாலுத்தனத்தையும் ரசிக்கும் முதல் ஆளாக நான் இருக்கேன். அம்மா தானே முதல்ல ரசிப்பாங்க, அதெப்படி அப்பா சொல்லிக்க முடியும்? சில நேரத்திலே நிலாவோட வாலுத்தனத்துக்கு அவங்க அம்மா டென்ஷன் ஆகுறாங்களே, அதனால அந்தப் பதவியை நானே எடுத்துக்கிட்டேன் (எப்பூடீஈஈ?). வீட்டில யாரும் ஃபோன் பேச முடியாது, இவங்க கைல ஃபோனைக் கொடுத்திடணும். இவங்க வாங்கி “ஹலோ, மம்மம் சாப்டியா” என்றெல்லாம் பொறுப்பா விசாரிப்பாங்க. மத்தவங்க மம்மம் சாப்பிட்டாங்களேன்னு விசாரிக்கிறியே, நீ ஒழுங்கா சாப்பிடுறியான்னு கேட்டா, அதுக்கு மட்டும் அழகா “வேணாம்மா” “வேணாம்ப்பா” சொல்லக் கத்துக்கிட்டாங்க.

அம்மாக்காரங்க புள்ளைக்கிட்டே டென்ஷன் ஆனாலோ சின்னதா அடிச்சாலோ (டையப்பரில் தான்) நமக்கு டென்ஷன் ஆகும். அதனாலேயே சில நேரத்திலே எங்களுக்குள்ள வாக்குவாதம் நடக்கும். ஆனா, கொஞ்ச நேரத்திலே அம்மாவும் பொண்ணும் இழைஞ்சுக்கறதைப் பார்த்தா “அடப்பாவிகளா, இதுக்காகவா நான் என்னோட எனர்ஜிய வேஸ்ட் பண்ணேன்”னு நினைக்கத் தோணும். நான் நிலா கிட்டே டென்ஷன் ஆக மாட்டேன், ஆனா அவ எதாவது தப்பு செய்யிறான்னா கொஞ்சம் மிரட்டுற மாதிரி பார்ப்பேன். உடனே மேடம் “ராஜாப்பா”ன்னு வந்து கட்டி பிடிச்சுப்பாங்க. அப்போ மட்டும் கேக்காமலே முத்தமெல்லாம் கிடைக்கும். அதுக்கு மேல எங்கேர்ந்து டென்ஷன் ஆகுறது? டென்ஷனெல்லாம் புஸ் ஆகி “இந்தக் கன்னத்துல” என்று மறுகண்ணத்தையும் காட்டி முத்தம் வாங்கிப்பேன். கூடவே “ஐ லவ் யூ” சொல்லுன்னு சொல்லி அவங்க பாஷைல ஒரு “ஐ லல் ல்லூ”வும் வாங்கிப்பேன்.

நைட்டுல எவ்ளோ நேரமானாலும் அவங்களா டயர்ட் ஆனா தான் தூங்க வைக்க முடியும். அதுவும் வெளிச்சத்தம் எதுவும் இல்லாம இருக்கணும், அநாவசிய வெளிச்சம் இருக்கக்கூடாது. “நிலா தூங்குடா” என்று சொன்னதுமே நல்லப்பிள்ளையா போய் பெட்டுல படுத்து தனக்குத் தானே “ரோரோ” தட்டிப்பாங்க. அட இப்படி ஒரு நல்லப்பிள்ளையான்னு ஆச்சர்யப்படுறிங்களா? அதான் இல்ல. அடுத்த செகண்டே எழுந்து உட்கார்ந்துப்பாங்க. அப்போ படுத்தது? அது நாம சொல்றதைக் கேட்டு நடந்துக்கிறாங்களாம். சரி அப்பாவும் தூங்குறேன் நிலாவும் தூங்கிடுங்கன்னு சொல்லிட்டுப் படுத்தா, அடுத்த நிமிஷம் வயித்து மேல ஏறி உட்கார்ந்துகிட்டு குதிரை ஓட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அதுவும் இப்போ எஜிப்ட் போய்ட்டு வந்ததுலேர்ந்து குதிரை சத்தத்தோட ஓடுது (அங்கே குதிரை வண்டில போனதுல இருந்து இப்போ குதிரை சத்தமும் போட ஆரம்பிச்சாச்சு)

அம்மாவும் பொண்ணும் மட்டுமா பகல் முழுக்க இருக்கிறதால அப்பப்போ கோமதி எதாவது புதுசு புதுசா சொல்லித் தர்றதா இருக்காங்க. இப்போ கொஞ்சம் கொஞ்சமா தமிழ், இங்க்லீஷ் ரைம்ஸ்ல ஒவ்வொரு வரியிலேயும் அவங்க பாதி சொல்ல நாம மீதி முடிக்கிற நிலைமைல இருக்கு. இல்லைன்னா நாம எடுத்துக்கொடுக்க அவங்க முடிக்கிற மாதிரி. நான் தான் பொண்ணுக்கு எல்லாம் சொல்லித் தர்றேன், நீ எதுவுமே சொல்லித் தர்றது இல்லைன்னு கோமதி என்கிட்டே குறை சொல்லாத நாளே இல்ல. சரி நம்மால முடிஞ்ச நல்ல காரியம் செய்வோம்ன்னு ஒரு நாள் நிலா அழறான்னு தூக்கி வச்சிக்கிட்டு “என்னம்மா பண்ணலாம், டிஸ்கோவுக்குப் போகலாம். வோட்காவப் போடலாம் ஓடிப்பாடி ஆடலாம்”ன்னு பாடினேன். இப்போ எம்பொண்ணு “டுமீலு டுமிலு”ன்னு நான் பாடினாலோ டிவியில் அந்தப் பாட்டின் வரி வந்தாலோ “டுமாங் டுமாங் ங்கொய்யா” என்று பாடுகிறாள்.

போன வாரம் நிலா மேடம் சென்னை போய்ட்டாங்க. அங்கே எல்லோர் கிட்டேயும் நல்லா ஒட்டிக்கிட்டாங்களாம். ஆனா, மேய்க்கிறது தான் பெரிய கஷ்டமா இருக்காம். வீட்டுலேயே சின்னப்பையன் என் மச்சான், அவனாலேயே முடியலையாம். அப்போ பெரியவங்க நிலைமை? ரகளை தான். அங்கே அவங்களுக்கு மனோ தாத்தா, பாட்டி, தாத்தா, ஆயா, மாமா, மாமி, அத்தை, அத்தாச்சி, அக்கம்பக்கம் ஆண்டீஸ், மாமாஸ்ல்லாம் நிறைய பேரு இருக்காங்க. ஆனா, இங்கே அப்பாவுக்கு? ஐ மிஸ் யூ டா குட்டிம்மா.

Tuesday, October 13, 2009

நிலாவின் துபாய் பயணம்

கொஞ்சியவர்கள் (10)
துபாய் போகணும்ன்னு எப்பவோ திட்டம் போட்டது, ஏதோ சில காரணங்களால தள்ளிப் போய்கிட்டே இருந்தது. எங்க நிலாக்குட்டி ரொம்ப லக்கி தான். ஒரு வயசிலேயே துபாய் சுத்திப் பார்க்கக் கிளம்பிட்டாங்க. நிலாவைக் கூட்டிக்கிட்டு டூர் போறோம்ன்னு ப்ளான் பண்ணப்போவே நம்ம ரொம்ப சுத்திப் பார்க்க முடியலைன்னாலும் ஓரளவுக்கு சுத்தி பார்க்கணும்ங்கிற மனநிலையோட தான் கிளம்பினோம். போர்டிங் முடிச்சு ஃப்ளைட்ல ஏறி உட்கார்ந்ததும் சீட்டையெல்லாம் பார்க்கதவளுக்கு என்ன ஞாபகம் வந்துச்சோ தெரியல “தாத்தா தாத்தா”ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டா. அப்போ தான் அவ இந்தியா போகப்போறோம்ன்னு நினைச்சிக்கிட்டான்னு புரிஞ்சுது. அப்புறம் தாத்தா இல்லடா, நாம மாமாவைப் பார்க்கப் போறோம்ன்னு சொல்லி அவளை கன்வின்ஸ் பண்ண கொஞ்ச நேரத்திலே ஒரு தூக்கத்தையும் போட்டுட்டா.

பொதுவாவே நிலாவுக்கு சுதந்திரமா சுத்தணும். சாப்பிடும்போது கூட சுத்திக்கிட்டே சாபிட்டா நல்லா சாப்பிடுவா. நல்லவேளையா ஆசிஃப் அண்ணனோட கடல் போல இருந்த வீட்டுல (துபாய்ல அது பெரிய வீடு தான்) தங்கினதால நிலாவைச் சமாளிக்க முடிஞ்சுது, ஹோட்டலெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை. சகல வசதிகளோட அந்த வீட்டைக் கொடுத்த ஆசிஃப் அண்ணனுக்கு ரொம்ப நன்றி சொல்லணும். அவங்க வீட்டுல ஜாலியா சுத்தினது மட்டுமில்லாம கூடவே எல்லா பொருள்களையும் இழுத்து கீழே போட்டுக்கிட்டு என்ஜாய் பண்ணிக்கிட்டு இருந்தா. அதே மாதிரி வெளில சுத்தும்போதெல்லாம் தொல்லைக் கொடுக்காம ஜாலியா என்ஜாய் பண்ணா. வெள்ளைக்காரங்களுக்கெல்லாம் ஷேக் ஹாண்ட் கொடுத்து ஃப்ரண்டு பிடிச்சிக்கிட்டா. ஆனா, புது இடத்திலே தூங்குறதுக்கு இவ்ளோ படுத்துவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல (என்ன பண்றது, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் புது இடம்ன்னா தூக்கம் வராதே, அப்புறம் புள்ளை மட்டும் என்ன பண்ணும்).

நிலா பார்த்து என்ஜாய் பண்ணதுன்னா அது அங்கே இருந்த துபாய் ஷாப்பிங் மால்ல அக்வேரியம் போனப்போ தான். மீனையெல்லாம் கிட்டே பார்த்ததுல அவளுக்கு ரொம்பவே ஆச்சர்யம். கூட ஜெஸிலாவோட பொண்ணு ஃபாத்தீன் அவளுக்கு நல்ல கம்பெனி.

நிலாவுக்கு யாரைப் பார்த்தாலும் மாமா ஆண்ட்டின்னு சொல்லுன்னு சொல்லிக் கொடுத்தது தப்பாப் போச்சு. அவ இஷ்டத்துக்கு எல்லோரையும் மாமா, ஆண்ட்டி, பாட்டி, லேசா வெள்ளை முடி தெரிஞ்சா உடனே தாத்தான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டா. இங்கே சவுதியிலே பிரச்சனை இல்லை, ஏன்னா அவங்களுக்கு தமிழ் புரியாது. எனக்கு துபாய் போறோம்ன்னதும் முதல்ல பயம் வந்ததே அதுக்கு தான். அங்கே நிறைய தமிழர்கள் இருப்பாங்களே. அதனால அவளா யாரையாச்சும் பாட்டியோ தாத்தாவோ கூப்பிடுறதுக்கு முன்னாடி நான் ஆண்ட்டி, அங்கிள்ன்னு சொல்லிட்டா அவ அப்டியே கூப்பிடுவா. அப்படி தான் ஒரு வெள்ளைக்கார கிழவிய ஆண்ட்டின்னு நிலா கூப்பிடவும் அந்தம்மாவுக்கு சந்தோஷம் தாங்கல. கூடவே, அவங்க சொல்லிக்கொடுத்த மாதிரியெல்லாம் இவளும் செய்யவும் ஸ்மார்ட் கேர்ள்ன்னு பாராட்டினாங்க.

அதே மாதிரி, ஹோட்டல் சரவணபவன், நம்ம பிரபல பதிவர் குசும்பன் புண்ணியத்திலே ஆச்சி ரெஸ்டரண்ட் எல்லா இடத்திலேயும் சர்வரை எல்லாம் மாமான்னு கூப்பிட்டு அவங்க கிட்டே பாப்பாக்கு என்ன வேணும்ன்னு கேட்ட உடனே இட்லின்னு சொன்னதும் அவங்களுக்கும் ஆச்சர்யம் தாங்கல. மாமா மாமான்னு கூப்பிட்டதால ரொம்பவே குஷி ஆகிட்டாங்க. கடைசியா கிளம்புற அன்னைக்கு தௌ க்ரூஸ் போட்டிங் போணோம். அங்கே முழுக்க வெள்ளைக்காரங்க. மேடம் எல்லார் கிட்டேயும் தானா போய் ஷேக் ஹேண்ட்ல்லாம் கொடுத்து ஃப்ரண்ட் ஆகிட்டாங்க. இவ அவங்க அப்பா ஃபோனை வச்சிக்கிட்டு போட்ல போட்ட சீன் தாங்கலை. எல்லோரும் செம்மையா கமெண்ட் அடிச்சு சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க. ஆனா திரும்ப வந்ததும் என் வீட்டுக்காரர் மட்டும் அழுதுக்கிட்டு இருந்தார். ஹிஹிஹி வேற ஒண்ணுமில்ல, ஃபோனுக்கு ஆப்பு ஆகிடுச்சு. அந்த ஆப்பு முடிஞ்சு அடுத்த ஒரு வாரத்துல ஒரு பெரிய ஆப்பா வச்சிட்டா. நான் கிச்சன்ல ஏதோ எடுக்கப் போன நிமிஷத்துல லேப்டாப்பைப் பொறுப்பா கவுத்துப் போட்டு உஸ் (மூச்சா) அடிச்சுட்டா. அதனால தான் எப்பவோ டைப் பண்ணி வச்ச பதிவை போட முடியாம இவ்ளோ நாள் ஆகிடுச்சு (நெசமா தான் சொல்றேன், என்னை நம்புங்க). சரி, என்னோட புலம்பலை விடுவோம். நிலாவோட அடுத்த இண்டர்வியூக்கு போவோமா.....

1. கவிதா சொல்லு? (நேயர் விருப்பத்துக்காக)

2. ஐயப்பா சொல்லு? (நேயர் விருப்பத்துக்காக)

3. ஃபாத்தீன் அக்கா என்ன பாட்டுப் பாடுனாங்க?

ச்சூ ச்சூ மாயி

4. அறிவு மாமாக்கு என்னப் பாட்டுப் பிடிக்கும்?

பியா பியா ஓ பியா (சமீபத்துல நிச்சயம் ஆன எங்க அண்ணனோட ஆளு பேரு ப்ரியா. அவனை கலாய்க்கிறதுக்காக இந்த ட்ரைனிங். எப்பூடீஈஈ???)

5. அப்பா ஈ தேய்க்கும்போது எப்படி கத்துவாங்க?

உவ்வா

6. சித்தாவோட பேர் என்ன?

ப்ரபு

7. அத்தாச்சி பேர் என்ன?

காவ்யா

8.ஆயாவோட பேர் என்ன?

சல்வீஈஈஈ

9. பன்னீர் தாத்தா வந்தா பாப்பா என்ன சொல்லுவிங்க?

வாங்க (மத்த யாராவது வீட்டுக்கு வந்தா நாங்க கூப்பிடச் சொன்னா தான் வாங்கன்னு கூப்பிடுவா. ஆனா பன்னீர் தாத்தா வந்தா மட்டும் அவளாவே கூப்பிடுவா)

10. பாப்பாவைக் குளிக்கச் சொன்னா எப்படி அழும்?

ம்ஹ்ம் ம்ஹ்ம்

11. பாப்பா எப்படி சிரிப்பிங்க?

ஈ ஈஈ ஈஈ

12. பாப்பாவுக்கு எப்படி கோபம் வரும்?

ஆ...ப்

13. பாப்பாவோட செருப்பு எப்படி கத்தும்?

கீன் கீன்

14. பாப்பாக்கு எத்தனை இட்லி வேணும்?

டூ த்தீ (எது கேட்டாலும் டூ த்தீ தான்)

15. ரக்‌ஷிதா பாப்பா நிலாவை எப்படி கூப்பிடுவா?

நிலா அக்கா (இங்கே நிலாவை விட மூணு மாசம் சின்னக்குழந்தை தான் ரக்‌ஷிதா. சும்மா ஒரு நாள் விளையாட்டா ரக்‌ஷிதா உன்னை நிலா அக்கான்னு கூப்பிடுவாடான்னு சொன்னதோட விளைவு)

Get this widget | Track details | eSnips Social DNA


பின்குறிப்பு: நிலாவுக்கு துபாய்ல எடுத்த ஃபோட்டோல்லாம் பார்க்கிறதுன்னா அவ்ளோ சந்தோஷம். முக்கியமா ஃபாத்தீன் அக்கா பார்க்கிறதுல தான் குஷி அதிகம். ஃபாத்தீன் அக்கா ஃபாத்தீன் அக்கான்னு சொல்லிக்கிட்டே இருப்பா. ரெண்டு நாள் முன்னாடி ஒரு சூப்பர் மார்கெட்ல ஃபாத்தீன் சைஸ்ல ஒரு பொண்ணைப் பார்த்துட்டு ஃபாத்தீன் அக்கா ஃபாத்தீன் அக்கான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டா. அது ஃபாத்தீன் அக்கா இல்லைடான்னு சொன்னாலும் அவ கடைசி வரைக்கும் நம்பல. எத்தனையோ பேரைப் பார்த்திருந்தாலும் குழந்தைகளுக்கு குழந்தைகள் தாங்க அவங்க மனசுல நிக்கிறாங்க!

Tuesday, September 15, 2009

நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் - நிலாக்காலம்

கொஞ்சியவர்கள் (21)
ஊருக்குப் போனதுல நிலாவோட பல இனிமையான நினைவுகளைப் பகிர்ந்துக்க முடியாம போனதுல எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். என்ன தான் நான் இப்போ அதைச் சொன்னாலும் சுடச்சுட அந்தந்த விஷயங்களை பகிர்ந்துக்கும்போது கிடைக்கிற சுவாரசியமே தனி தான். அதே மாதிரி இந்த நீண்ட இடைவெளில சில பல நிகழ்வுகளை நான் மறந்தும் போயிருக்கலாம்.

குட்டிநிலாவைப் பத்தி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு. இப்போல்லாம் அவளோட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. கூடவே கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கு. மேடம் ஒரு நிமிஷம் சும்மா இருக்கிறது இல்லை. ரொம்ப வாலுத்தனம் பண்றாங்க.

ஊருக்குப் போனதும் நிலா முதல்ல கொஞ்சம் நிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் 2 அல்லது 3 அடி வச்சு நடக்க ஆரம்பிச்சு டமால் டமால்ன்னு விழுவாங்க. தாத்தா நடைவண்டி வாங்கி கொடுத்ததும் அவ முகத்துல தான் எவ்ளோ சந்தோஷம். என்னமோ அவ ஒரு பெரிய கார் ஓட்டிட்டு வர்ற மாதிரி ஒரு ஃபீலிங். எப்போ பாரு நடைவண்டி தான். அதை ஓட்டுறதுன்னா அவ்ளோ சந்தோஷம். நிறைய சமயம் டின்னர் ஊட்டிவிட எனக்கு நடைவண்டி தான் உதவி பண்ணிருக்கு. இப்படி சில மாசத்துக்கு முன்னாடி இங்கேயும் அங்கேயும் வேகமா தவழ்ந்துகிட்டு இருந்த நிலா இப்போ என்னடான்னா ததக்கா பிதக்கான்னு நடக்குறா, ஓடுறா. யப்பாஆஆஆஆஆஆ முடியலலலலலலலலலலலலலல. நிலாவோட ஒவ்வொரு விஷயங்களையும் புகைப்படம் மற்றும் வீடியோவா பதிவு பண்ண நினைச்ச நாங்க அவ ஊர்ல உடம்பு முடியாம சோர்வா இருந்ததால அவ நடக்க ஆரம்பிச்சதெல்லாம் பதிவு பண்ண முடியாமலே போய்டுச்சு.

இப்போ நிலாக்குட்டிகிட்டே தான் எவ்ளோ மாற்றம்!! நாம எது பேசினாலும் அவங்களும் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்ல முயற்சி பண்றாங்க. நானும் என் வீட்டுக்காரரும் இனிமே கிண்டலுக்கு கூட அவ முன்னாடி திட்டிக்க வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டோம். மழலைச்சொல்ன்னு கேள்விப்பட்டிருக்கோம். அதையெல்லாம் தாண்டி நிலா சில வார்த்தைகளை ரொம்ப அழகா திருத்தமா சொல்றது ஆச்சர்யமா தான் இருக்கு.

நிலாவோடு ஒரு குட்டி இண்டர்வியூ (இதோட ஆடியோ கீழே)

1. பாப்பாவோட பேர் என்னம்மா?

ந்நிலாஆஆ

2. பாப்பாவோட அப்பா பேர் என்னம்மா?

ஆஜ்ஜா (அம்மா பேரை கேக்கக்கூடாது. சொல்றது ரொம்ப கஷ்டம். எல்லாம் சொல்லிக்கொடுத்தேன், என் பேரைச் சொல்ல மாட்டேங்குறியே நிலா)

3. அப்பா எங்கேம்மா போய்ருக்காங்க?

ஆசீஸ் (ஆஃபீஸ்)

4. பாட்டி பேர் என்னம்மா?

கீத்தா

5. பாப்பாக்கு என்ன புடிக்கும்?

இட்ட்ட்லீ

6. பாப்பா ஒன் டூ த்ரீ சொல்லுங்க?

ஒன் (மட்டும் நாம சொல்லணும்) டூ த்தீ

7. பாப்பா ஒரு பாட்டுப் பாடுங்க?

சா, தீஈஈஈ (தொடையில் தாளத்துடன்), க (நாம சொல்லணும்), ம, பா (அவ்ளோ தான்)

8. காக்கா எப்படி கத்தும் (கொஞ்சம் கிறுக்குத்தனமான கேள்வி தான்)?

கா கா

9. மாடு எப்படி கத்தும்?

மாஆஆஆ

10. பூனை எப்படி கத்தும்?

ய்யாஆஆவ்வ்வ்வ்

11. நாய் எப்படி கத்தும்?

வவ் வவ்

12. குரங்கு எப்படி கத்தும்?

கொர்ர்ர்ர்ர்

13. கோழி எப்படி கத்தும்?

கொக்ககொகோ

இதெல்லாம் இல்லாம நிலா மழலையோட சொல்லும் சில வார்த்தைகள்

1. பூயி (பூரி)
2. ம்ம்மை (பொம்மை)
3. ண்ண்ணீ (தண்ணி)
4. சாயி (சாரி)
5. காங்க் யூ (தாங்க் யூ - இது அவ சொல்றப்போ எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
6. மாயீ (மாமி)
7. டை (வடை)
8. ச்சாக்கி (சாக்லேட்)
9. க்க்கர் (குக்கர்)
10. ஜூஊஊஸ் (ஜூஸ்)
11. தச்சு (தயிர்)
12. ண்ண்ணா (அண்ணா)
13. க்க்கா (அக்கா)


அம்மா, அப்பா, தாத்தா, மாமா, பாட்டி, டாடி, பால், பால் (ball), பாட்டில், சட்டை இதெல்லாம் ரொம்ப க்ளியரா வர்ற வார்த்தைகள். நிலா இந்த ரெக்கார்டிங்கு அப்புறம் இன்னும் நிறைய பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதெல்லாம் கூடிய விரைவில் அடுத்தப் பதிவாக.

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, July 7, 2009

Birthday Countdown

கொஞ்சியவர்கள் (4)
முன்பு ஒரு வலைப்பதிவில் குழந்தையின் பிறந்தநாள் கவுண்ட் டவுன் பார்த்தபோது நிலாவின் பிறந்தநாளுக்கு ஒரு மாசம் முன்னரே இப்படி ஒண்ணு நம்ம குட்டிம்மா பதிவிலும் போடணும்ன்னு நினைத்திருந்தேன். வழக்கம் போல சோம்பேறித்தனம், மறதி, அலுவலக வேலை எல்லாமும் ஒண்ணு சேர்ந்து விட்ஜெட் போட மறந்துட்டேன். நேற்று ஜெஸிலாவின் குழந்தைக்கு ஒரு வயது, இன்று வேறொரு நண்பனின் இரு குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடைவது நினைவுக்கு வந்து “அட நம்ம குட்டிம்மாவுக்கும் அடுத்த மாசம் ஒரு வயசாகப் போகுதே, இன்னும் விட்ஜெட் போடலையே” என்ற நினைவும் வந்தது. நினைவு வர்றப்போவே அதை செய்யலைன்னா பிறகு மறந்துடுவேன் (கஜினி வியாதி எனக்கும் உண்டு), அதனால மறக்காம உடனே விட்ஜெட் சேர்த்தாச்சு.

பிகு: நிலா அம்மா இப்போ சென்னையில் இருக்காங்க. மேடம் கிட்டே கணினி இல்லை, அதனால் பதிவுகள் எதுவும் எழுதல. அடுத்த மாசம் திரும்ப சவுதி பாலைவனத்திற்கு வந்த பிறகு பின்னூட்டங்களுக்கு பதில்களும், பதிவுகளும் போடுவாங்கன்னு எதிர்பார்ப்போம்.

Monday, June 22, 2009

32 கேள்விகள் - தொடர்ப்பதிவு

கொஞ்சியவர்கள் (10)
32 கேள்விகள் தொடர்ப்பதிவுக்கு என்னை அழைத்த கவிதாவுக்கு நன்றி.

கேள்விகளும் எனது பதில்களும்

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ஜாதகத்தின்படி “கோ” என்ற எழுத்திலே ஆரம்பிக்கணும்ன்னு அப்படி வச்சாங்க. ம்ம் பிடிக்கும். தோழிகள் ”கோம்ஸ்” என்றும் வீட்டிலும் மற்றும் உறவினர்களும் ”கோமு” என்றும் அழைப்பார்கள். என் கணவருக்கு மட்டும் இந்தப் பெயர் பிடிக்காததில் கொஞ்சம் வருத்தம்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ஒரு தோழியின் வீட்டில் நிலா நாற்காலியை பிடித்துக்கொண்டு நின்றிருந்தவள் அப்படியே தன் மீது நாற்காலியை சாய்த்துக்கொண்டு விழுந்துவிட்டாள். அவள் வலி தாங்காமல் அழுதபோது நானும் அழுதுவிட்டேன்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும். ஏனென்றால் எங்கள் வீட்டில் என் அண்ணன்கள் தம்பியை விட என் கையெழுத்து தான் நன்றாக இருக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

முருங்கைக்காய் கத்திரிக்காய் மாங்காய்லாம் போட்ட சாம்பார், பருப்பு ரசம், உருளைக்கிழங்கு வறுவல்.

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

யோசிக்க வேண்டிய விஷயம்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

பாத்ரூம் ஷவரில் குளிக்கப் பிடிக்கும்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயங்கள்: எந்த மாதிரியான நபர்களிடமும் அவர்களது குணத்துக்கு ஏற்ற மாதிரி எளிதில் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன், யாரிடமும் சண்டைப் போட்டு பேசாமல் இருந்தது இல்லை.

பிடிக்காத விஷயங்கள்: நிலாவிடம் தேவையில்லாமல் கோபப்படுவது, என் கணவர் மேல் பொஸஸிவ்வாக இருப்பது, ஒருவர் மீது வரும் முதல் அபிப்ராயத்தை கடைசி வரை மாற்றாமல் இருப்பது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிச்ச விஷயங்கள்: எல்லோரிடமும் அன்பாக பழகுவது, நண்பர்களுக்காக எதையும் செய்வது, எனக்கு பிடிக்கும் என்பதற்காக விசேஷ நாள்களில் சர்ப்ரைஸ் கொடுப்பது.

பிடிக்காத விஷயங்கள்: தேவையில்லாமல் கோபப்படுவது, எப்போதும் டிவி முன்னால் அமர்ந்திருப்பது, கடலைப் போடுவது ;)

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

நிலா பிறந்த பின் என் பாட்டி இல்லையேன்னு வருந்துகிறேன்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

நீலநிற ஆடை.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

எப்போதும் சன் மியூசிக்கில் பாட்டு கேட்பது பிடிக்கும். இப்பொழுதும் சன் மியுசிக்கில் “என் செல்லப்பேரு ஆப்பிள்” பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம் அல்லது கருப்பு.

14. பிடித்த மணம்?

மழைநேர மண்வாசனை, மல்லிகைப்பூ வாசம், நிலாவிடம் வரும் பால் வாசனை.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஃபைசா காதர் - அவங்க பதிவு முன்பு படித்திருக்கிறேன். உபயோகமான வீட்டு அலங்கார குறிப்புகள் நிறைய எழுதி இருக்காங்க. அவங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னு ஆசை.

மலர்ச்செல்வி - ரியாத்தில் நான் ரசிக்கும் பெண் எழுத்தாளர். நிறைய படித்திருந்தாலும் அலட்டல் இல்லாமல் இருப்பவர்.

கே.வி.ராஜா - என் கணவர் என்னைப் பற்றி என்ன சொல்றார்ன்னு தெரிஞ்சிக்கணும்ன்னு ஆசை :)))))))))))))))

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

அம்மாவின் குறிப்புகள் என்ற தலைப்பிலே அம்மாக்களின் வலைப்பதிவுகளில் இட்ட அனைத்து இடுகைகளும் பயனுள்ளதாக இருந்ததால் பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?

சதுரங்கம், இறகுப்பந்து. இப்போதைக்கு பிடித்த விளையாட்டு நிலாவிடம் “பிடிபிடிபிடி”ன்னு சொல்லி அவளை துரத்திக்கொண்டு ஓட அவள் வேகமாக தவழ்ந்து ஓடுவது, சோஃபாவின் பின்புறம் நிலாவுடன் மறைந்துகொண்டு விளையாடுவது.

18. கண்ணாடி அணிபவரா?

இல்லை

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

மணிரத்னம் படங்கள், நகைச்சுவை திரைப்படங்கள்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

அருந்ததீ

21. பிடித்த பருவ காலம் எது?

இளவேனிர்க்காலம்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஒண்ணுமில்லை (சாரி அதுக்குலாம் இப்போ நேரமில்லை)

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாதத்திற்கு ஒரு முறையாவது.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: புல்லாங்குழல் இசை

பிடிக்காத சத்தம்: ஆம்புலன்ஸ் சைரன்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பஹ்ரைன்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எந்தக் குழந்தையையும் எளிதில் நண்பர்களாக்கிக்கொள்வது.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கை துரோகம்

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தளம்?

ஸ்விஸ், கேரளா

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

வாழ்க்கையில் எத்தகைய உயர்வு தாழ்வு வந்தாலும் ஒரே மாதிரி இருக்க ஆசை.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

ஷாப்பிங் (என் கணவருக்கு பொறுமை கிடையாது)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

"Life is like an ice-cream, enjoy it before it melts"

Wednesday, May 27, 2009

ம்மாஆஆஆஆஆ

கொஞ்சியவர்கள் (3)
நிலாவோட ஆயாவும் தாத்தாவும் இப்போ சவுதி வந்திருக்காங்க, அதனால நிலாவோட அம்மா ரொம்பவே பிஸி ஆகிட்டாங்க. நிலாவைப் பத்தி எழுதக் கூட நேரம் இல்லை. குட்டிநிலாவுக்கு வேற பாவம் நடுவிலே காய்ச்சல். இப்போ தான் ஒகே ஆனாங்க. அதனால வலைப்பதிவு பக்கம் வரவே முடியல, அதுக்குள்ளே நிலாவைப் பத்தி எழுதறதுக்கும் கொஞ்சம் விஷயங்கள் கிடைச்சிருக்கு:

 • நிலாவுக்கு காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி தான் "ம்மா" சொல்ல ஆரம்பிச்சாங்க. காய்ச்சல் வந்ததும் "அம்மே அம்மே"ன்னு நிறைய முறை கூப்பிட்டதைப் பார்க்கும்போது பாவமா இருந்துச்சு (சோகத்திலும் சுகம்)


 • குட்டிநிலா இப்போ சூப்பரா பை சொல்லக் கத்துக்கிட்டாங்க. அவங்க பை சொல்ற அழகே தனி தான். அவங்க குட்டி கையை அழகா அவங்க முகத்துக்கு நேரா திருப்பி வச்சுக்கிட்டு வேகமா கைய அசைச்சு அவங்களுக்கே அவங்க சூப்பரா சொல்லிக்கிறாங்க (எனக்கு என்னமோ அவங்க பை சொல்றது மட்டும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்)


 • எப்போவாச்சும் நிலா சாப்பிடாம அடம் பிடிக்கும்போதெல்லாம் "நிலா அம்மாவுக்கு வேணாம் போ"ன்னு விளையாட்டா நான் சொல்ல ஆரம்பிச்சதுல இப்போ மேடம் எது சாப்பிடக் கொடுத்தாலும் "னாணாம் னாணாம்"ன்னு அழகாச் சொல்றாங்க (இனிமே அம்மா னாணாம் சொல்ல மாட்டேன் ஸாரி நிலா).


 • முன்னாடில்லாம் "ஷேக் ஹேண்ட்ஸ் நிலா" சொல்லிக் கொடுப்பேன். அப்போல்லாம் செய்ய மாட்டாங்க, இப்போ நாலு நாலா நிலா எல்லோருக்கும் சூப்பரா கை கொடுக்கிறாங்க. (ஆரம்பிச்சுட்டா டா ட்ரைனிங் செஸன்னு தயவு செய்து யாரும் என்னை திட்டாதிங்கஅஅஅஅ)


 • நிலா இப்போ நாம செய்றது பேசறதெல்லாம் ரொம்பவே கவனிக்க ஆரம்பிச்சுட்டா. ஒரு நாள் ஒரு காமெடி நடந்துச்சு. அவங்க தாத்தா சோஃபால படுத்துக் குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தாங்க. நிலா கீழ உட்கார்ந்துகிட்டு அவங்கள ரொம்ப நேரமா உத்துப் பார்த்துக்கிட்டே இருந்தா. எதுக்காக அப்படி பார்க்கிறான்னு எனக்கும் என் கணவருக்கும் ஒண்ணும் புரியல. நாங்களும் பெருசா கண்டுக்கல. கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா அவங்க தாத்தா மாதிரியே உதட்டை வச்சுக்கிட்டு குறட்டை விட்டு காமிக்கிறாங்க. எங்க ரெண்டு பேருக்கும் சிரிப்பு தாங்க முடியலை. (ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல)


 • நிலாவோட அப்பாவுக்கு பிறந்தநாள் வர்றதால "ஹேப்பி பர்த்டே டூ யூ" பாட்டை கை தட்டிப் பாடிச் சொல்லிக் கொடுத்தேன். அவளும் "ஹேப்பி பர்த்டே டூ யூ" பாடினா போதும், உடனே கை தட்ட ஆரம்பிச்சிடுவா. அப்புறம் முடிஞ்ச உடனே கை கொடுக்கணும்ன்னு சொல்லிக் கொடுத்தேன். நிலாவும் சூப்பரா செய்ய ஆரம்பிச்சுட்டா. அநேகமா இந்த முறை அவங்க அப்பாவுக்கு இது தான் பெரிய பர்த்டே கிஃப்ட்டா இருக்கும்ன்னு நினைக்கிறேன் (இந்த ஊர்ல பெண்கள் தனியா போய் கிஃப்ட்டும் வாங்க முடியாது. அப்படியும் என் நண்பர்கள் மூலமா ரெண்டு முறை வாங்கி கொடுத்திருக்கேன். இந்த முறை வெளில போக முடியாததால சீப் & பெஸ்ட் கிஃப்ட்:-) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)


 • நிலாவோட அப்பாகிட்டே ஒரு நாள் "நான் தான் புள்ளைக்கு புதுசா எதுனா சொல்லித் தர்றேன். நீ(ங்க) எதுவும் சொல்லித் தர மாட்டிங்களான்னு கேட்ட உடனே அவர் "நான் தான் அவளுக்கு பிச்சு பிச்சு சொல்லிக் கொடுத்திருக்கேனே"ன்னு சொன்னார். ஆமாம், நிலாவை யாராச்சும் எதுனா திட்டினா அவ திருப்பி "பிச்சு பிச்சு"ன்னு ஆள்காட்டி விரலால காமிக்க ஆரம்பிச்சுட்டா. அவர் சும்மா ஸ்டார்ட் பண்ணி விட்டார். ஆனா நம்ம தான் அதையும் முறையா சொல்லிக் கொடுத்தோம்ல (நம்ம எதுனா கோபமா சொன்னா மேடம் நமக்கே பிச்சு பிச்சுங்கிறாங்க, ஒண்ணும் பண்ண முடியல)


இந்த இருபது நாள்ல நிலா கிட்டே எவ்ளோ மாற்றங்கள்ன்னு நீங்க எல்லாம் ஆச்சர்யப்படுறது புரியுது. சில விஷயங்கள் அவளுக்கு முன்னாடியே தெரியும், பை சொல்றது, ஷேக் ஹேண்ட்ஸ் கொடுக்கறதெல்லாம். ஆனா திடீர்ன்னு தான் அவ இதெல்லாம் ஒழுங்கா செய்ய ஆரம்பிச்சா. உண்மையிலேயே ஒன்பது மாசம் முடிஞ்சதுக்கு அப்புறம் நிலா கிட்டே நிறைய மாற்றங்கள். அதெல்லாம் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஒரு வித்தியாசமான அனுபவமாவும் இருக்கு.

Tuesday, May 5, 2009

மரூன் கலரு ஜிங்குச்சான்

கொஞ்சியவர்கள் (8)
நிலாவைப் பற்றிய ஒரு முக்கியமான அழகான குட்டியான விஷயத்தை நான் பதிவுல போடவே மறந்துட்டேன். அதை நினைவுபடுத்திய என் கணவருக்கு நன்றி. பொதுவாவே பெண் குழந்தைகளுக்கு தான் விதம் விதமா ஆடைகள் கிடைக்குது. ஃப்ராக், மிடி, ஸ்கர்ட் & டாப், ஜீன்ஸ் & டாப், காக்ரா ச்சோளி, ஷராரா இப்படி ஏகப்பட்ட வகைகள். எவ்ளோ தான் புதுசு புதுசா உடைகள் வந்தாலும் நம்ம பாரம்பரிய பட்டுக்கு தனி மவுசு தான். அதுவும் பெண் குழந்தைகளுக்கு பட்டுப் பாவாடை கட்டினாலே ஒரு தனி அழகு வந்துடும்.

நிலாவோட முதல் பிறந்த நாளுக்காக முன்கூட்டியே பட்டுப்பாவாடை சட்டை ஊர்லேயே எடுத்துத் தைக்கலாம்ன்னு நான், என் நாத்தனார், மாமியாரோட நிலாவையும் கூட்டிக்கிட்டு நல்லிக்குப் போயிருந்தோம். அப்போ நிலாவுக்கு ஐந்து மாசம் தான் முடிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். கடைக்காரர் எல்லா சட்டைகளையும் ஒண்ணு ஒண்ணா எடுத்துப் போட்டுக் காமிச்சுட்டு இருந்தார். அதிலே எங்களுக்கு ரெண்டு சட்டை ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ஒண்ணு பச்சை கலர், இன்னொண்ணு மரூன் கலர். அப்போ தான் என் மாமியார் "பேசாம இது ரெண்டுத்துல நிலாவையே ஒண்ணு செலக்ட் பண்ணச் சொல்லுவோம்"ன்னு ஒரு யோசனைச் சொன்னாங்க. அதுவும் நல்ல ஐடியா தான்னு சொல்லி அவ கிட்டே காமிச்சோம். அவ அழகா அவளோட குட்டி கையால மரூன் கலரைத் தொட்டா. சரி, பளிச்ன்னு இருக்குன்னு செலக்ட் பண்றா போலன்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் கடைக்காரர் வேற கலர் சட்டைய காமிங்கன்னு அவரா ஒண்ணு எடுத்துக் கொடுத்தார். அப்பவும் அந்த மரூன் கலரை தான் தொட்டாங்க. திரும்ப இன்னும் ரெண்டு ட்ரஸோட சேர்த்துக் காட்டினோம். அப்பவும் மரூன் கலர் தான். எனக்கோ ஆச்சர்யம். சரி, அவ பக்கத்திலே மரூன் சட்டை இருக்கிறதால தான் அதை சுலபமா செலக்ட் பண்றா போலன்னு வேற மாதிரி மாத்திக் காட்டினோம். என் மாமியார் ரெண்டு கலர் சட்டைகளும், என் நாத்தனார் ரெண்டு கலர் சட்டைகளையும் கையிலே எடுத்து வச்சிக்கிட்டு மரூனை அவ கைக்கு கொஞ்சம் எட்டாத மாதிரி தள்ளி வச்சு காட்டினோம். அப்பவும் அவங்க ரெண்டு கையையும் அழகா கொண்டு போய் அதே மரூன் சட்டையிலே வச்சாங்க.

குழந்தைங்க வாக்கு தெய்வ வாக்கு மாதிரின்னு சொல்வாங்கன்னு கடைக்காரர் ஆச்சர்யப்பட்டுச் சொல்லவும், நாங்களும் கொஞ்சம் ஆச்சர்யத்தோடயே அவ செலக்ட் பண்ண அதே சட்டைய வாங்கிட்டு வந்துட்டோம். நிலா அதிர்ஷ்டக்காரங்க தான் ஐந்து மாசம் இருக்கும் போதே அவங்க சட்டையை அவங்க விருப்பப்படி எடுக்குறாங்க நானெல்லாம் காலேஜ் போற வரைக்கும் என் விருப்பப்படி சட்டை எடுத்ததே இல்லை ஹும்ம்ம்ம்..... சரி குட்டி நிலாவோட சட்டையை பார்ப்போமா?

Tuesday, April 21, 2009

கை தட்டித்தட்டி அழைத்தாளே

கொஞ்சியவர்கள் (17)
ஒரு பெண் எப்பொழுது பொறுமைசாலி ஆகிறாள்ன்னு என்கிட்டே கேட்டா, கண்டிப்பா அம்மா ஆனதுக்கு அப்புறம் தான்னு சொல்லுவேன். ஏன்னா, நிலாக்குட்டி பிறந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் பொறுமைசாலி ஆகி இருக்கேன். ஆனால், இன்னும் பொறுமைசாலி ஆக வேண்டி இருக்கு. நிலாக்குட்டி வந்த பிறகு என்கிட்டே நிறைய மாற்றங்கள் இருக்குற மாதிரி நிலாக்குட்டியும் நிறையவே மாறி இருக்காங்க. இன்னையோட நிலாக்கு எட்டரை மாசம் ஆகப் போகுதுன்னு நினைக்கும்போது ஆச்சர்யமா தான் இருக்கு. நாள்கள் ரொம்ப வேகமா ஓடுது. இந்த எட்டரை மாசத்திலே நிலாக்குட்டிக்கிட்டே எவ்ளோ மாற்றங்கள்!!! • சுத்தமா மொட்டையா இருந்த நிலாவோட தலையிலே இப்போ முடியெல்லாம் வளர்ந்திருக்கு

 • அமைதியா இருந்த நிலாக்குட்டி இப்போ ரொம்ப வாலு ஆகிட்டாங்க (அம்மாவுக்கு தான் செம்ம வேலை வைக்கிறாங்க)

 • பொக்கையா இருந்த நிலாவுக்கு கீழே ரெண்டு பல் வளர்ந்து இப்போ மேலேயும் புதுசா ரெண்டு பல் வரப்போகுது (அம்மாவை சூப்பரா கடிக்கிறாங்க)

 • கையை வச்சு நீச்சல் அடிக்கிற மாதிரி தவழ்ந்துகிட்டு இருந்த நிலா இப்போ கொஞ்சம் முட்டிப்போட்டுத் தவழ ஆரம்பிச்சிட்டாங்க.

 • பொறக்கும்போது கொஞ்சம் கலர் கம்மியா இருந்த நிலா இப்போ கலராகிட்டாங்க.

 • எது பேசினாலும் பதிலுக்கு பொக்கைச்சிரிப்பு மட்டுமே சிரிக்கிற நிலா இப்போ என்ன சொல்றோம்ங்கிறத கவனமா கேட்டு ஓரளவுக்கு புரிஞ்சிக்கவும் செய்றாங்க. மூணு நாளைக்கு முன்னாடி "clap your hands நிலா"ன்னு நானும் கையைத் தட்டிச் சொல்லிக்கொடுத்தேன். கொஞ்ச நேரத்திலேயே சுலபமா கத்துக்கிட்டாங்க. உடனே திரும்பவும் செஞ்சாங்க. அதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி sit, standல்லாம் சொல்லிக்கொடுத்திருக்கேன். அப்போல்லாம் உட்கார மாட்டாங்க. இப்போ என்னடான்னா என் கையைப் பிடிச்சிக்கிட்டு சூப்பரா சொன்னதைச் செய்றாங்க. ஆனால் sit, stand செய்றப்போ வேணும்ன்னே clap your hands செய்ய மாட்டேங்கிறாங்க (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்).நிலாக்குட்டிக்கு தோற்றத்திலேயும் வளர்ச்சியிலும் வர்ற மாற்றங்கள் சாதாரணமானது தான். ஆனால், பொறந்ததுலேர்ந்து அவங்க கிட்டே மாறாத விஷயங்கள்ன்னு சிலது இருக்கு, அது இன்னமும் அப்படியே தான் இருக்கு.


 • நிலாக்கு தூக்கம் வரலைன்னா பாட்டுப் பாடணும். எந்த சாப்பாடு கொடுத்தாலும் அம்மா ரைம்ஸ் இல்லைன்னா பாட்டு பாடி தான் ஊட்டி விடணும் (ரொம்ப பசில இருந்தா மட்டும் தேவையில்லை).

 • நிலா முகத்திலே யாராவது கையை வச்சா மேடம்க்கு செம்ம கோபம் வரும்.

 • யாராச்சும் உடனே தூக்கினா கொஞ்சம் சினுங்குவாங்க. கொஞ்சி பாட்டுப் பாடி சிரிக்க வச்சு தான் கரெக்ட் பண்ணணும்.

 • அவ பக்கத்திலே அம்மா அப்பா படுத்துக்கிட்டு இருக்கும்போது நடுல திடீர்ன்னு முழிச்சாலும் பொறுப்பா அவங்க அப்பாவை கொஞ்சம் கூட தொந்தரவு பண்ணாம என் மேல வந்து கைய வச்சி தட்டித் தட்டி எழுப்பி, எழுந்துக்கலைன்னா முடிய பிடிச்சு இழுத்து எழுப்புவாங்க.).இது எல்லாத்தையும் விட முக்கியமானது, அம்மா எதாவது கோபிச்சிக்கிட்டு திட்டினாலும் அடுத்த நொடியே அதை மறந்துட்டு எப்பவும் போல பாசத்தோட இருக்காங்க எங்க பாசக்கார நிலாக்குட்டி.

Saturday, April 11, 2009

உன் கண்ணில் நீர் வழிந்தால்

கொஞ்சியவர்கள் (8)
நிலாக்குட்டிக்கு குளிக்கறதுன்னாலே ஜாலி தான். ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப குஷி ஆகிடுவாங்க. குளிக்கறதுக்கு முன்னாடி அம்மா ஆயில் மஸாஜ்ல்லாம் பண்ணிவிட்டா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சுகமா கைய காலை நீட்டி காமிப்பாங்க. குட்டிநிலா குளிக்கும்போது ஒரே ஒரு பிரச்சனை தான் வரும். முகத்துக்கு மட்டும் சோப் போடக் கூடாது. கைய வச்சாலே சைரன் தான். இவங்க போடுற ஆட்டத்தைப் பார்க்கிறப்போ நிஜமாவே ஜான்ஸன்ஸ் பேபி சோப் போட்டா கண்ணு எரியுமோன்னு எனக்கு எப்பவும் சந்தேகம் வரும். அது உண்மையான்னு இதைப் படிக்கிற அம்மாக்கள் தான் சொல்லணும்.

இப்படி ஜாலியா போய்க்கிட்டு இருந்த நிலா குளியலுக்கு ஆப்பு வைக்கிற மாதிரி அவங்க அப்பா பாத்டப் வாங்கிட்டு வந்தாங்க. "நம்ம புள்ள இனிமே பாத்டப்லேயே குளிக்கட்டும், நல்லா என்ஜாய் பண்ணுவா"ன்னு சொன்னார். டாய்ஸ் ஷாப்ல போய் பாத்டப் டாய்ஸ்ல்லாம் தேடிப் பிடிச்சு வாங்கிட்டு வந்தோம். அடுத்த நாள் வழக்கம் போல ஆயில் மஸாஜ்ல்லாம் பண்ணி பாத்டப்ல குளிக்கறதுக்கு குட்டிநிலா ரெடி ஆனாங்க. அவங்கள உட்கார வச்சிட்டு அப்படியே நானும் பக்கத்திலே உட்கார்ந்துகிட்டேன் (பாத்டப் உள்ளே இல்லைங்க, பாத்டப் பக்கத்திலே). முதல்ல மேடம்க்கு அழுகை, முகமெல்லாம் மாறிடுச்சு. அப்புறம் கொஞ்சம் டாய்ஸைல்லாம் பார்த்த உடனே லேசா ஒரு சந்தோஷம். எங்கேயோ புது இடத்துல நாம உட்கார்ந்துட்டு இருக்கோம்ங்கிறதால பயம் மட்டும் குறையவே இல்லை. என் நைட்டியை ரெண்டு கையால ரொம்ப கெட்டியா புடிச்சிக்கிட்டாங்க. ஆனாலும் டாய்ஸைப் பார்த்ததும் எடுத்து விளையாடணும்ன்னு ஆசை (விளையாட எங்கே போறாங்க, வாய்ல வைக்கணும்ன்னு தான் ஆசை). "பயப்படாதேடா, அம்மா கெட்டியா புடிச்சிக்கிறேன், நீ டாய்ஸ்ல்லாம் வச்சு விளையாடு"ன்னு சொன்னேன். அப்போவும் கைய எடுக்கல. அப்புறம் அவளை நான் ஒரு கையால அணைச்ச மாதிரி பிடிச்சிக்கிட்டு இன்னொரு கைல டாய்ஸ் எடுத்து கொடுத்தப்போ கொஞ்சம் விளையாடி செட் ஆனாங்க. அப்புறம் உடம்புல தண்ணி ஊத்தி சோப் போடலாம்ன்னு ஆரம்பிச்சப்போ தான் வில்லங்கமே ஆரம்பம் ஆச்சு. மேடம்க்கு ஆயில் மஸாஜ்ல்லாம் பண்ணதால சொய்ய்ய்ய்ய்ய்ய்ங்க்ன்னு வழுக்கி விட்டுடுச்சு. அவ்ளோ தான், அழுமை ஆரம்பம் ஆகிடுச்சு. "ஒண்ணும் இல்லடா"னு சமாதானப்படுத்தி திரும்பவும் உட்கார வச்சா என் போறாத நேரம் திரும்பவும் வழுக்கிடுச்சு. மறுபடியும் சைரன். அதுக்கு அப்புறம் எவ்ளோ சமாதானப்படுத்தினாலும் ம்ஹ்ம் செம அழுமை. ஃபுல் வால்யூம்ல அழுதாங்க. ஒண்ணும் பண்ண முடியல, "சரி ஒகேடா"ன்னு வேற வழியில்லாம மடியிலே போட்டுக் குளிப்பாட்டியாச்சு. அன்னைக்கு முழுக்க பாத்டப்பைப் பார்க்கிறப்போல்லாம் விசும்பினாங்க.

அன்னைக்கு நைட் அவங்க அப்பா வந்ததும் நடந்ததெல்லாம் சொன்னேன். "நாளைக்கும் திரும்ப ட்ரை பண்ணி அவ பயத்தைப் போக்கு"ன்னு அட்வைஸ். சரி இந்த டைம் நோ ஆயில் மஸாஜ்ன்னு முடிவு பண்ணி கூட்டிட்டுப் போனேன். பாத்டப்பைப் பார்த்ததுமே வழக்கம்போல முகம் மாறி, உள்ளே உட்கார வச்சதும் பயங்கர அழுகை. திரும்ப என்னை கெட்டியா பிடிச்சிக்கிட்டாங்க. "நிலாம்மா ஒண்ணும் ஆகாதுடா, அம்மா பக்கத்திலேயே இருக்கேன்டா"ன்னு சொல்லிச் சொல்லி சமாதானம் செஞ்ச பிறகு மேடம் ரெண்டு கையால கெட்டியா பிடிச்சிக்கிட்டே லைட்டா ஒரு குளியலைப் போட்டாங்க (அவ அப்படி பிடிக்கிறப்போ நீ தான்மா எனக்கு எல்லாம்ன்னு சொல்ற மாதிரி இருந்துச்சு, ரொம்ப சுகமான அனுபவம் அது). அடுத்த நாள் கொஞ்சம் பயத்தோட டாய்ஸ்ல்லாம் வச்சு விளையாடிக்கிட்டே குளிச்சாங்க. அதுக்கு அப்புறம் இங்கே சவுதி க்ளைமெட் பண்ண சொதப்பல்ல நிலாவுக்கு கொஞ்சம் கோல்டும் வந்ததால அதிக நேரம் தண்ணில விளையாட வேண்டாம்ன்னு பாத்டப் குளியலை மூட்டைக் கட்டியாச்சு.

இப்போ கோல்ட் சரியாகி திரும்ப பாத்டப் குளியல் ஆரம்பம் ஆகிடுச்சு. ஆனால், இப்போ பழைய பயம் இல்லை, ஜாலியா குளிக்கிறாங்க. அம்மாவையும் கட்டிப் பிடிக்கிறது இல்ல :-((

Tuesday, March 31, 2009

முதல் கவிதை - ஹைக்கூ

கொஞ்சியவர்கள் (10)
பொக்கை சிரிப்பினுள்
அழுகை
பால் பற்கள்

பிகு: எனக்கு ஹைக்கூ இலக்கணமெல்லாம் தெரியாது, மனதில் தோன்றியதை எழுதி இருக்கிறேன்.

Wednesday, March 25, 2009

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

கொஞ்சியவர்கள் (8)
நிலாவுக்கு அப்போ அஞ்சு மாசம் முடிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். அவளுக்கு பால் கொடுத்துத் தூங்க வச்சிட்டு என் மாமியாரை பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு நானும் என் நாத்தனாரும் டைலர் கடைக்குப் போயிருந்தோம். நிலா எப்படியும் ரெண்டு மணி நேரம் தூங்குவா, அதுக்குள்ளே வேலையை முடிச்சிட்டு வந்துடலாம்ன்னு போணோம். நிலா முழிச்சிட்டா கால் பண்ணுங்கன்னு மாமியார் கிட்டே சொல்லிட்டுப் போனோம்.

நாங்க திரும்ப வர்ற வரைக்கும் கால் வரல, வீட்டுக்கு வரும்போது நிலாவை அவங்க ஆயா தூக்கி வச்சிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் முன்னாடி தான் முழிச்சான்னு சொன்னாங்க. நான் "நிலாக்குட்டி"ன்னு கூப்பிட்டேன். நிலா என்னை பார்க்கவே இல்ல. அவங்க அத்தைய மட்டும் பார்த்து சிரிச்சாங்க. சரின்னு நான் அவளை தூக்கினேன். "நிலாக்குட்டி" ம்ஹ்ம் "அம்முக்குட்டி" ம்ஹ்ம் அவ என்னைப் பார்க்கவே இல்ல. முகத்தை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமா திருப்பிக்கிட்டா. முகத்தை நேரா பார்த்து கூப்பிட்டா மேடம் மேலப் பார்க்கிறாங்க. கீழ மட்டும் தான் அவ பார்க்கல லெஃப்ட், ரைட், அப்'ன்னு எல்லா பக்கமும் பார்த்தாங்க, என்னை மட்டும் பார்க்கல. சரின்னு படுக்கையிலே கொண்டுபோய் போட்டேன். முகத்துக்கு நேரா போய் கூப்பிட்டேன், அப்பவும் கண்டுக்கல. அப்புறம் "ஸாரிடா நிலாக்குட்டி, ஸாரி அம்மு ஐ லவ் யூ டா பட்டு, இனிமே அம்மா உன்னை விட்டுட்டு போகமாட்டேன்டா ஸாரிடா ஸாரிடா"ன்னு சொன்ன பிறகு தான் என்னைப் பார்த்து கொஞ்சம் சிரிச்சாளே.

"இத்தணூண்டு இருந்துகிட்டு இதுக்கு என்ன கோபம் பாரு"ன்னு என் நாத்தனார் மாமியாரெல்லாம் ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க. எனக்கே கூட இன்னைய வரை அந்த இன்ஸிடெண்ட்ட மறக்க முடியல, அப்படியே மைண்ட்ல பதிவாகிடுச்சு. இப்போ தெரியுதா நான் ஏன் "ஸாரி, ஐ லவ் யூ டா"ல்லாம் சொன்னா நிலாவுக்குப் பிடிக்கும்ன்னு சொன்னேன்னு.

Monday, March 23, 2009

நிலாவும் அம்மாவும் (தொடர்ச்சி)

கொஞ்சியவர்கள் (4)
நிலாவுக்கு ரெண்டு மாசம் ஆகும்போது அவங்க ஆயா தாத்தா வீட்டுக்குப் போயாச்சு. கூடவே சீனியர் அத்தையும் வெகேஷன்க்கு வந்திருந்ததால நிலாக்கு சூப்பரா நேரம் போச்சு. எப்பவும் யாராவது அவங்கள பார்த்துக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருந்தாங்க. நிலாவுக்கு அவங்க ஆயா மேல எப்பவுமே தனி பாசம் தான். அவ ஸ்பெஷல் ஹாஸ்பிடல்லேர்ந்து வந்து என்னோட நான் இருந்த ஹாஸ்பிடல்ல இருந்த ரெண்டு நாளும் அவங்க ஆயா தான் அவளைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்க நெஞ்சிலே சாய்ச்சிக்கிட்டு ஆரோரோ பாட்டு பாடினா நிலா சூப்பரா தூங்கிடுவா. நிலாவுக்கு அவங்க ஆயா குளிப்பாட்டினா மட்டும் பிடிக்காது, குளிப்பாட்டி ட்ரெஸ்ல்லாம் மாட்டி மேக்கப்ல்லாம் போட்ட பிறகு கூட கொஞ்ச நேரம் வரைக்கும் ஆயாவைப் பார்த்து விசும்பிக்கிட்டே இருப்பா (அதைப் பார்க்க செம்ம காமெடியா இருக்கும்). திரும்ப கொஞ்ச நேரத்திலேயே ஆயா கூட செட் ஆகிடுவா. அதனால தான் எங்க நிலாவை "ரொம்ப பாசக்காஆஆஆஆஆஆஆஆஆர பொண்ணு"ன்னு சொல்வேன்.

நிலா அவங்க அப்பா மாதிரியே நிறைய விஷயத்திலே சுகவாசி. அவளுக்கு கை காலெல்லாம் அமுக்கிவிட்டா ரொம்ப பிடிக்கும். முதல் முதல்ல இந்த வேலைய அவங்க ஆயா தான் ஆரம்பிச்சு வெச்சாங்க. கூடவே "ஹப்பா ஹம்மா எவ்ளோ வேலைடா எங்க புள்ளைக்கு"ன்னு சொல்லிக்கிட்டே அமுக்கினா மேடம் முகத்திலே ஒரே புன்னகை தான். அவங்க தாத்தாவோ நிலாவை ஆறு மாசம் ஆகற வரைக்கும் தூக்க மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டாங்க (எந்தக் குழந்தைகளையுமே அவங்க சின்ன வயசுல தூக்க மாட்டாங்க), ஆனா நிலாவை தூளில ஆட்டி தூங்க வைக்கிறதுல அவங்க எக்ஸ்பர்ட். நானெல்லாம் அவ சீக்கிரமா தூங்கணும்ன்னு கொஞ்சம் நல்லா வேகமா ஆட்டுவேன், அவங்களோ ரொம்ப பொறுமையா நிதானமா ஆட்டி தூங்க வைப்பாங்க.

நிலாக்கு மூணு மாசம் முடியிற நேரத்திலே என்னோட விசாவும் முடியிற மாதிரி இருந்ததால சவுதிக்கு போக வேண்டிய கட்டாயம். அதனால, ரியாத்க்கு ஜூட் விட்டாச்சு. இங்கே ரியாத் வந்ததும் க்ளைமெட் அவளுக்கு சுத்தமா செட் ஆகல. சளி பிடிச்சு கஷ்டப்பட்டா. இந்தியால நிறைய பேர் சுத்தி இருந்துட்டு திடீர்ன்னு வந்த தனிமை அவளை ரொம்பவே கஷ்டப்படுத்திடுச்சு. குட்டிநிலா ரொம்பவே டல் ஆகிட்டாங்க. வீட்டுல அப்பாவும் அம்மாவும் மட்டும் தான், அப்பாவும் சாயந்திரம் தான் வருவாங்க, அம்மா கூட தான் முழுநேரமும் ஓட்டணும். அவளுக்கு ரொம்பவே போர் அடிச்சிடுச்சு. நைட்ல்லாம் திடீர்ன்னு பயந்துகிட்டு அழுவா. நிலாவுக்கும் அம்மாவுக்கும் இங்கே வழக்கம் போல நைட் ட்யூட்டி ஸ்டார்ட் ஆச்சு. ரெண்டு பேரும் விடிய காலைல உட்கார்ந்துகிட்டு டிவி பார்த்துக்கிட்டு இருப்போம். எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு மாசம் ஓட்டியாச்சு. பிறகு, சவுதில குளிர் ரொம்ப அதிகம் ஆனதால இந்தியாவுக்கே திரும்பி வந்துட்டோம்.

நிலா திரும்ப இந்தியா வந்தப்போ யார்கிட்டேயும் போகாம ரொம்ப அடம் பிடிச்சு அழுதா. ஆயா, அத்தை, தாத்தா யாரைப் பார்த்தாலும் அழுகை தான். மூணு நாலு நாள்ல மேடம் பேக் டூ ஃபார்ம்க்கு வந்துட்டாங்க. நிலாவும் பெரிய அத்தையும் சாயந்திரம் ஆனா கச்சேரி ஆரம்பிச்சிடுவாங்க, ஒரே ஆட்டம் தான். அவங்க அத்தை தாளம் போட, நிலா சூப்பரா கைய காலை அசைச்சுகிட்டு டான்ஸ் ஆடுவாங்க. நிலா நாலு மாசம் வரைக்கும் நைட்டெல்லாம் சரியா தூங்காம இருந்தா, அப்போ அவங்க பெரிய அத்தை சும்மா கிண்டலுக்காக "அது எப்டி நிலா நீ பகலெல்லாம் அம்பியா இருக்கே, சாயந்திரம் ரெமோவா மாறி கைய கால ஆட்டிட்டு ஜாலியா விளையாடுற, நைட் மட்டும் ஏன் அந்நியனா மாறிடுறேன்னு (சும்மா கிண்டலுக்குடா நிலாக்குட்டி, கோச்சிக்காதே ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்) கேட்டாங்க. அதுக்கு அவங்க நடு அத்தை "புள்ளைய போய் ஏன் அப்படில்லாம் சொல்றிங்க"ன்னு சண்டைப் போட ஆரம்பிச்சிட்டாங்க. நிலாக்கு மூணு அத்தைங்க கிடைச்சது ஒரு பெரிய கிஃப்ட்டுன்னு தான் நினைக்கிறேன். நடு அத்தைக்கு பையன் இருக்கிறதால மருமகளை ஸ்பெஷலா கவனிப்பாங்க. "மாமியார்ன்னு ஒரு மரியாதை இல்லாம என்னடி ஓவரா ஆட்டம் போடுறேன்"னு அவளை சும்மா வம்பு வளர்த்துக்கிட்டு சண்டைப் போடுவாங்க. அவளும் சூப்பரா சண்டைப் போடுவா. அவங்க அத்தை சவுண்டு விட்டா இவளும் பதிலுக்கு சவுண்டு விடுவா, வேற யார்கிட்டேயும் சண்டைப் போட மாட்டா. அதையெல்லாம் அப்போ ரெக்கார்ட் பண்ணாம விட்டுட்டேன்னு இப்போ வருத்தமா இருக்கு (அப்போல்லாம் நிலாவுக்காக ஒரு வலைப்பதிவு எழுதப் போறேன்னு தெரியாம போய்டுச்சு :-) ). கடைக்குட்டி அத்தை நிலாவைப் பாட்டுப் பாடியே கரெக்ட் பண்ணிட்டாங்க. நிலாவுக்கு கொஞ்சம் குத்துப்பாட்டெல்லாம் அறிமுகம் செஞ்ச பெருமை அவங்களையே சாரும். "வேர் ஈஸ் த பார்ட்டி", "டாடி மம்மி வீட்டில் இல்லே"ன்னு பாட்டுப் பாடியே நிலாக்கு செரிலாக்கெல்லாம் ஊட்டி விடுவாங்க.

நிலா - நிலாவும் அம்மாவும் மட்டுமில்ல. நிலா, அம்மா, அப்பா, அத்தைகள், மாமாக்கள், மாமி, அத்தாச்சிகள், அத்தான், தாத்தாக்கள், பாட்டி, ஆயான்னு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. எழுத தான் கை வலிக்குது :-).

Monday, March 16, 2009

நிலாவும் அம்மாவும்

கொஞ்சியவர்கள் (4)
எந்த தாயாவது பச்சைக்குழந்தைக்கிட்டே கோபப்படுவாளா? “அப்படில்லாம் கோபப்படுவாங்களா என்ன, அவளுக்கு என்ன கிறுக்கா, அவ என்ன ராட்சஸியா?”ன்னு நீங்க கேக்கறதெல்லாம் என் காதுல விழுது. ஆமாம், தவமாய் தவமிருந்து பெற்ற நிலாகிட்டேயே நான் ஓரிரு சமயங்கள்ல கோபபட்டிருக்கேன். அது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்ன்னு அப்போ எனக்குப் புரியல. இப்போ அதை நினைச்சுப் பார்த்தா கஷ்டமா தான் இருக்கு. பொதுவாவே எனக்கு ஒரு இரவு சரியா தூங்கலைன்னாலும் ரொம்பவே டையர்ட் ஆகிடும். நிலா வந்ததுக்கு அப்புறம் பல இரவுகள் தூங்காமலே கழிச்சிருக்கேன். அவ தினமும் சரியா பண்ணிரெண்டுலேர்ந்து ஒரு மணிக்குள்ளே முழிச்சிடுவா, அதுலேர்ந்து காலைல ஆறு ஏழு மணி வரைக்கும் தூங்காமலே இருப்பா. சில நாட்கள்ல மேடம் தூங்க ஆரம்பிக்கிறதே மூணு நாலு மணியா தான் இருக்கும். எங்க ரூம்ல எங்களுக்காக ஒரு டிவி இருக்கும், சன் மியூசிக் போட்டுவிட்டுட்டு ரெண்டு பேருமா பாட்டுக் கேட்டுட்டு இருப்போம். அப்பவும் மேடம் சுகவாசி தான், பெட்ல படுத்து பாட்டுக் கேக்க மாட்டாங்க, அம்மா மடில படுத்து தான் கேப்பாங்க.

நிலாவ தூங்க வைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அவங்கள மடில போட்டு ஆட்டிக்கிட்டே பாட்டுப் பாடணும், அப்போ தான் தூங்குவாங்க. எங்க வீட்டுல நிலா முதல் பேரக்குழந்தைங்கிறதால எல்லாருக்குமே பாசம் ரொம்ப அதிகம். என் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணின்னு எல்லோருமே அவளை மடில போட்டுத் தாலாட்டுவாங்க. அதுக்காக நடுராத்திரில அவங்களை எல்லாம் எழுப்ப முடியுமா? அதுவும் எங்க அண்ணன் அண்ணி புதுசா கல்யாணம் ஆனவங்க, எங்க அப்பாவோ கடை வச்சிருக்கிறவர். அவருக்கு காலைல எழுந்து கடையத் திறக்க வேண்டிய வேலை இருக்கும், நைட் பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வருவார், பகல்லேயும் ரெஸ்ட் கிடையாது. எப்படியோ என்னால முடிஞ்ச வரைக்கும் சமாளிப்பேன், முடியலைன்னா அம்மாவை எழுப்புவேன். அம்மாவுக்கும் பகல்ல வேலை அதிகமா இருந்ததால கொஞ்ச நேரம் பார்த்துப்பாங்க, அப்புறம் அப்பா தான் பார்த்துப்பாங்க. “சரிப்பா நீங்க நிலாவைப் பார்த்துக்கோங்க”ன்னு சொல்லிட்டு நான் போய் படுக்கவும் முடியாது, படுக்க மனசும் வராது. புள்ளைக்கு பாவம் பசி வந்துட்டா என்ன பண்றதுன்னு யோசனையா இருக்கும், அதனால அப்படியே பக்கத்துல சோஃபால சாய்ந்துகிட்டு கண்ணை மூடி ரிலாக்ஸ் பண்ணிப்பேன். நிறைய டைம் அப்பாவை நினைச்சா பாவமா இருக்கும். ”இன்னும் கொஞ்ச நாள் தான பார்த்துக்கப் போறிங்க”ன்னு சொல்லி சொல்லியே அவரை பார்த்துக்க வச்சாச்சு.

சரி சரி, மேட்டர்க்கு வர்றேன். நிலாகிட்டே நான் எதுக்காக கோபப்பட்டேன்னு தானே கேக்குறிங்க. நிலா தூங்காம இருந்ததுக்காக நான் என்னைக்கும் அவக்கிட்டே கோபப்பட்டது இல்லை. அவ என் பாலை குடிக்காம வம்பு பண்ணும்போது கோபப்பட்டிருக்கேன். ஆனா அவ எதுக்காக பால் குடிக்க மாட்டேங்கிறா, அவளுக்கு உடம்புக்கு எதோ பண்ணுது போலன்னுல்லாம் யோசிக்கத் தோணல. எனக்கு தூக்கமின்மை, கூடவே சி-செக்‌ஷன் பண்ணதால மடில வச்சி தொடர்ந்து ஆட்டிக்கிட்டு இருக்கும்போது வர்ற வலி எல்லாம் சேர்ந்து நிலா மேல கோபப்பட வச்சிடுச்சு. இப்போ என் நிலாக்குட்டி கிட்டே அதுக்காக ஸாரி கேட்டுக்கிறேன். “சாரிடா நிலாக்குட்டி, ஐ லவ் யூ டா பட்டு”. எங்க நிலாக்குட்டிக்கு சாரி, ஐ லவ் யூல்லாம் சொன்னா ரொம்ப பிடிக்கும் ;-) (அதுக்கு பின்னாடி ஒரு குட்டிக்கதையே இருக்கு, அதை அப்புறம் சொல்றேன்). குழந்தைங்க நிறைய விஷயங்களுக்காக அழுவாங்கன்னு அப்போ புரியல. பசிக்கு மட்டுமில்ல, நேப்பி மாத்தறதுக்கு, வயத்துவலிக்கு (அப்பா அம்மால்லாம் வயத்துவலியா இருக்கும், வுட்வார்ட்ஸ் கொடுன்னு சொல்லுவாங்க, டாக்டரை கேக்காம எதுவும் கொடுக்க மாட்டேன்னு சொல்லிடுவேன்), போட்டிருக்கிற ட்ரஸ் வசதியா இல்லைன்னா, அப்புறம் சும்மா ஜாலிக்காக இன்னும் நிறைய காரணங்கள் சொல்லலாம். அடடா, நிறைய எழுதிட்டேன்னு நினைக்கிறேன், அப்புறம் போர் அடிக்க ஆரம்பிச்சுடப் போகுது. இப்போதைக்கு ஒரு குட்டி ப்ரேக். நிலாவும் அம்மாவும் தொடரும் ........................ காத்திருங்கள்.

Sunday, March 15, 2009

நிலாவின் வருகை

கொஞ்சியவர்கள் (11)
கருவறையிலேயே இசைப்பயணத்தோடு வளர்ந்த நிலாக்குட்டி due date வந்த பிறகும் அவளோட தலையை வலுக்கட்டாயமா இறக்காமலே வச்சுட்டு இருந்ததால வேற வழியே இல்லாம ஆகஸ்ட் ஐந்தாம் தேதி 2008ம் வருடம் இரவு 7:37க்கு C-section மூலமா பிறந்தாங்க. பிறக்கும்போதே மஞ்சள் காமாலையும் லேசான மூச்சுத் திணறலும் இருந்ததால அவளை தனியா குழந்தைகளை பராமரிக்கும் ஸ்பெஷல் மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க. நான் கண் விழிச்சுப் பார்க்கும்போது ICUல இருந்தேன். நர்ஸைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வி "எனக்கு என்ன குழந்தைப் பிறந்திருக்கு?" "பெண் குழந்தை"ன்னு சொன்னாங்க, ரொம்பவே சந்தோஷமா இருந்தது.

பொதுவாவே எனக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும். மூணு ஆண் பசங்களோடவே வளர்ந்ததாலோ என்னவோ ஆண் குழந்தைங்க மேல கொஞ்சம் ஈர்ப்பு அதிகமா இருந்தது. என் கணவருக்கோ பெண் குழந்தைகள்ன்னா ரொம்பப் பிடிக்கும். நான் conceive ஆகி இருக்கும்போது என் கணவர் கிட்டே சும்மா ஒரு பந்தயம் கட்டினேன். "நான் உனக்காக பெண் குழந்தை பிறக்கணும்ன்னு வேண்டிக்கிறேன்பா, நீ எனக்காக ஆண் குழந்தை பிறக்கணும்ன்னு வேண்டிக்கோ"ன்னு. அதே மாதிரி பெண் குழந்தை பிறந்தா நான் அவர் மேல அதிகம் அன்பு வச்சிருக்கறதாவும் ஆண் குழந்தை பிறந்தா அவர் என் மேல அதிகம் அன்பு வச்சிருக்கறதாவும் அர்த்தம்ன்னு சொல்லிருந்தேன். அந்த பந்தயத்தோட முடிவுல நான் ஜெயிச்சிட்டத நினைச்சு எனக்கு அன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு, கூடவே நிலாவைப் பார்க்க முடியலையேங்கிற வருத்தம் ரொம்ப அதிகமா இருந்துச்சு. எப்படியோ சீனியர் டாக்டர் கிட்டே பர்மிஷன் வாங்கி மொபைல்ல ஒரு ஃபோட்டோ எடுத்துட்டு வந்தார் என் கணவர். அதைப் பார்த்த பிறகு தான் கொஞ்சம் நிம்மதி வந்துது. ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல ஐந்து நாட்கள் நிலாவைப் பார்க்க முடியாம கஷ்டப்பட்டேன். என் கணவர் மட்டும் காலையும் மாலையும் விசிட் அடிச்சிட்டு வருவார். "என் கை விரலைக் கொடுத்தேன், அழகா பிடிச்சிக்கிட்டா"ன்னு சொல்லுவார். கேட்கும்போது கொஞ்சம் பொறாமையா கூட இருக்கும். இப்பவும் நிலாக்காக சும்மா சின்ன சண்டைப் போட்டாலும் "அவ என் பொண்ணு, அவளை முதல்முதலா பார்தததும் நான் தான், அவ முதல்முதலா தொட்டதும் என் கைவிரலை தான்"ன்னு சொல்லி வெறுப்பேத்துவார்.

குட்டிநிலா வந்த பிறகு லைஃப் டோட்டலா மாறிடுச்சு. தூக்கமின்மையால ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். நைட்ல்லாம் தெளிவா ஆட்டம் போடுவா, பகலெல்லாம் சூப்பரா தூங்குவா. நிலாவுக்கும் அம்மாக்கும் நடந்த போராட்டங்களெல்லாம் கொஞ்சம் பொருத்திருந்து பார்ப்போம்.

Thursday, March 12, 2009

குட்டி நிலாவின் குட்டி அறிமுகம்

கொஞ்சியவர்கள் (27)
ஒவ்வொரு பொண்ணோட வாழ்க்கையிலும் குழந்தைங்க ஒரு இன்றியமையாத பங்கை வகிக்கிறாங்க. பொதுவா ஒரு பெண் தாய்மையாகும்போது தான் முழுமை அடைகிறாள்ன்னு சொல்லுவாங்க. நம்ம S.J. சூர்யா படத்துல கூட ஒரு பாட்டு “காலையில் தினமும் கண்விழித்தால்”ன்னு ஆரம்பிச்சு “தாயான பின்பு தான் நீ பெண்மணி”ன்னு வரும். நிலா பொறக்கறதுக்கு முன்னாடி இதெல்லாம் கேக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும். முக்கியமா அந்தப் பாடலைக் கேக்கும்போது நெறைய முறை உள்ளுக்குள்ளே அழுதிருக்கேன். அந்த உணர்வுகளை குழந்தை இல்லாதவங்களால மட்டும் தான் புரிஞ்சிக்க முடியும். ஒரு குழந்தைக்காக ரொம்பவும் ஏங்கி அது கிடைச்சதுக்கு பிறகு வர்ற சந்தோஷம் ரொம்பவே சுகமானது. நிலாவைப் பத்தி எழுதணும்ன்னு ஆரம்பிச்சு என் கதைய ஓட்டிக்கிட்டு இருக்கேன், ஸாரி ஸாரி. நிலாக்குட்டி பத்தி சொல்லணும்ன்னா நிறைய விஷயங்கள் இருக்கு, ஆனா எல்லாத்தையும் எழுதறதுக்கு எனக்கு நேரம் கிடைக்குமான்னு தெரியல, முடிஞ்ச வரைக்கும் முயற்சிப்போம்.

நிலாவப் பத்திச் சொல்லணும்ன்னா “அவ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பாசமான வாலுப்பொண்ணு”.

அதே மாதிரி, நிலாவுக்கு உங்கள பிடிக்கணும்ன்னா மூணு முக்கியமான தகுதிகள் வேணும்.

முதல்ல உங்களுக்கு பாட்டுப் பாடத் தெரிஞ்சிருக்கணும். முக்கியமா மெலடி பாட்டுகள். அதுக்காக நீங்க பெரிய சுசிலாவா இருக்கணும்ன்னு அவசியம் இல்ல. சும்மா பாடத் தெரிஞ்சிருந்தா போதும். குறிப்பிட்டுச் சொல்லணும்ன்னா “தூளியிலே ஆடவந்த” பாட்டைப் பாடத் தெரியணும்.

ரெண்டாவது, நிலாவை சூப்பரா கொஞ்சத் தெரியணும். “என் செல்லக்குட்டி, புஜ்ஜிக்குட்டி, அம்முக்குட்டி, பட்டுக்குட்டி”ன்னு கொஞ்சிட்டு பிறகு தான் நிலாவைத் தூக்கணுமே.

கடைசியா, அவங்கள தூக்கிக்கிட்டு வேடிக்கைக் காட்டணும். அது எல்லா குழந்தைக்குமே புடிச்ச விஷயம் தான்.

பொதுவா எல்லா குழந்தைகளுக்குமே பாட்டுன்னா பிடிக்கும், ஆனா நிலாவோட விருப்பம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். குத்துப்பாட்ட விட மெலடி பாட்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பா. நிலாவுக்கு இசை பிடிக்கும்ங்கிறது அவ என் வயிற்றுக்குள்ளே இருக்கும்போதே எனக்குத் தெரிய ஆரம்பிச்சிடுச்சுன்னு சொன்னா நீங்க நம்புவிங்களான்னு தெரியல. நான் கர்ப்பமாகி ஆறு மாசம் ஆகியும் அசைவே இல்லாம ரொம்ப பயந்துட்டு இருந்தேன். அந்தச் சமயத்திலே என் வீட்டுக்காரர் எனக்கு Pregnancy CD ஒண்ணு அனுப்பி வச்சார். அதுல பாட்டெல்லாம் இருக்காது, இசை மட்டும் தான். அந்த இசையை நான் கேக்கும்போது தான் அவ முதல் முதல்ல அசைஞ்சா. உடனே அவருக்கு ரொம்ப தேங்க்ஸ் சொல்லி சந்தோஷப்பட்டேன். இப்படி, நிலாவோட இசைப்பயணம் கருவறையிலே ஆரம்பிச்சிடுச்சு.

Monday, March 9, 2009

செல்ல நிலா

கொஞ்சியவர்கள் (2)
நிலாக்காலம் வலைப்பதிவுக்கு வருகைத் தரும் அனைவருக்கும் வணக்கம். குழந்தையின் வளர்ச்சியைப் பதிவு செய்வதென்பது புகைப்படம், ஒளிப்படம் தாண்டி வலைப்பதிவாகவும் முன்னேறியுள்ள இந்தக் காலகட்டத்தில் எங்களின் செல்ல மகள் நிலாவின் வளர்ச்சியையும் வாலுத்தனங்களையும் பதிவு செய்யும் முயற்சியே இந்த வலைப்பதிவு. இது அவள் வளர்ந்த பிறகு அவளே திரும்பிப் பார்க்கவும் உதவும் என்றும் நம்புகிறோம்.

காலையில் நிலா கண் விழிக்கும்போது அவளுக்கு குட்மார்னிங் சொல்லி அவள் பொக்கை வாயால் சிரிக்கும் மறு நிமிடமே பை பை நிலாவும் சொல்பவன் நான். குழந்தையுடன் செலவழிக்கும் நேரம் குறைவு. அதனால் இங்கே நான் பதிவு இடுவதை விட நிலாவின் அம்மாவும் சில சமயங்களில் நிலாவும் அதிகமாக பதிவிடுவார்கள். நிலாவின் ஒலிப்பதிவுகளும், தட்டச்சுப் பதிவுகளும் கூட வர வாய்ப்புண்டு.

வேறென்ன, இனி "இது ஒரு அழகிய நிலாக்காலம்"

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

கொஞ்சியவர்கள் (12)
ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஹேஏஏஏஏஏ

யா யா யா

ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

தா தா தா

அக்கே

பா பா பா ப்ர்ர்ர்ர்

ஹூஊஊஊ
 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez