Tuesday, March 31, 2009

முதல் கவிதை - ஹைக்கூ

கொஞ்சியவர்கள் (10)
பொக்கை சிரிப்பினுள்
அழுகை
பால் பற்கள்

பிகு: எனக்கு ஹைக்கூ இலக்கணமெல்லாம் தெரியாது, மனதில் தோன்றியதை எழுதி இருக்கிறேன்.

Wednesday, March 25, 2009

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்

கொஞ்சியவர்கள் (8)
நிலாவுக்கு அப்போ அஞ்சு மாசம் முடிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். அவளுக்கு பால் கொடுத்துத் தூங்க வச்சிட்டு என் மாமியாரை பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டு நானும் என் நாத்தனாரும் டைலர் கடைக்குப் போயிருந்தோம். நிலா எப்படியும் ரெண்டு மணி நேரம் தூங்குவா, அதுக்குள்ளே வேலையை முடிச்சிட்டு வந்துடலாம்ன்னு போணோம். நிலா முழிச்சிட்டா கால் பண்ணுங்கன்னு மாமியார் கிட்டே சொல்லிட்டுப் போனோம்.

நாங்க திரும்ப வர்ற வரைக்கும் கால் வரல, வீட்டுக்கு வரும்போது நிலாவை அவங்க ஆயா தூக்கி வச்சிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் முன்னாடி தான் முழிச்சான்னு சொன்னாங்க. நான் "நிலாக்குட்டி"ன்னு கூப்பிட்டேன். நிலா என்னை பார்க்கவே இல்ல. அவங்க அத்தைய மட்டும் பார்த்து சிரிச்சாங்க. சரின்னு நான் அவளை தூக்கினேன். "நிலாக்குட்டி" ம்ஹ்ம் "அம்முக்குட்டி" ம்ஹ்ம் அவ என்னைப் பார்க்கவே இல்ல. முகத்தை அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமா திருப்பிக்கிட்டா. முகத்தை நேரா பார்த்து கூப்பிட்டா மேடம் மேலப் பார்க்கிறாங்க. கீழ மட்டும் தான் அவ பார்க்கல லெஃப்ட், ரைட், அப்'ன்னு எல்லா பக்கமும் பார்த்தாங்க, என்னை மட்டும் பார்க்கல. சரின்னு படுக்கையிலே கொண்டுபோய் போட்டேன். முகத்துக்கு நேரா போய் கூப்பிட்டேன், அப்பவும் கண்டுக்கல. அப்புறம் "ஸாரிடா நிலாக்குட்டி, ஸாரி அம்மு ஐ லவ் யூ டா பட்டு, இனிமே அம்மா உன்னை விட்டுட்டு போகமாட்டேன்டா ஸாரிடா ஸாரிடா"ன்னு சொன்ன பிறகு தான் என்னைப் பார்த்து கொஞ்சம் சிரிச்சாளே.

"இத்தணூண்டு இருந்துகிட்டு இதுக்கு என்ன கோபம் பாரு"ன்னு என் நாத்தனார் மாமியாரெல்லாம் ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க. எனக்கே கூட இன்னைய வரை அந்த இன்ஸிடெண்ட்ட மறக்க முடியல, அப்படியே மைண்ட்ல பதிவாகிடுச்சு. இப்போ தெரியுதா நான் ஏன் "ஸாரி, ஐ லவ் யூ டா"ல்லாம் சொன்னா நிலாவுக்குப் பிடிக்கும்ன்னு சொன்னேன்னு.

Monday, March 23, 2009

நிலாவும் அம்மாவும் (தொடர்ச்சி)

கொஞ்சியவர்கள் (4)
நிலாவுக்கு ரெண்டு மாசம் ஆகும்போது அவங்க ஆயா தாத்தா வீட்டுக்குப் போயாச்சு. கூடவே சீனியர் அத்தையும் வெகேஷன்க்கு வந்திருந்ததால நிலாக்கு சூப்பரா நேரம் போச்சு. எப்பவும் யாராவது அவங்கள பார்த்துக்கிட்டு கொஞ்சிக்கிட்டு இருந்தாங்க. நிலாவுக்கு அவங்க ஆயா மேல எப்பவுமே தனி பாசம் தான். அவ ஸ்பெஷல் ஹாஸ்பிடல்லேர்ந்து வந்து என்னோட நான் இருந்த ஹாஸ்பிடல்ல இருந்த ரெண்டு நாளும் அவங்க ஆயா தான் அவளைப் பார்த்துக்கிட்டாங்க. அவங்க நெஞ்சிலே சாய்ச்சிக்கிட்டு ஆரோரோ பாட்டு பாடினா நிலா சூப்பரா தூங்கிடுவா. நிலாவுக்கு அவங்க ஆயா குளிப்பாட்டினா மட்டும் பிடிக்காது, குளிப்பாட்டி ட்ரெஸ்ல்லாம் மாட்டி மேக்கப்ல்லாம் போட்ட பிறகு கூட கொஞ்ச நேரம் வரைக்கும் ஆயாவைப் பார்த்து விசும்பிக்கிட்டே இருப்பா (அதைப் பார்க்க செம்ம காமெடியா இருக்கும்). திரும்ப கொஞ்ச நேரத்திலேயே ஆயா கூட செட் ஆகிடுவா. அதனால தான் எங்க நிலாவை "ரொம்ப பாசக்காஆஆஆஆஆஆஆஆஆர பொண்ணு"ன்னு சொல்வேன்.

நிலா அவங்க அப்பா மாதிரியே நிறைய விஷயத்திலே சுகவாசி. அவளுக்கு கை காலெல்லாம் அமுக்கிவிட்டா ரொம்ப பிடிக்கும். முதல் முதல்ல இந்த வேலைய அவங்க ஆயா தான் ஆரம்பிச்சு வெச்சாங்க. கூடவே "ஹப்பா ஹம்மா எவ்ளோ வேலைடா எங்க புள்ளைக்கு"ன்னு சொல்லிக்கிட்டே அமுக்கினா மேடம் முகத்திலே ஒரே புன்னகை தான். அவங்க தாத்தாவோ நிலாவை ஆறு மாசம் ஆகற வரைக்கும் தூக்க மாட்டேன்னு பிடிவாதமா சொல்லிட்டாங்க (எந்தக் குழந்தைகளையுமே அவங்க சின்ன வயசுல தூக்க மாட்டாங்க), ஆனா நிலாவை தூளில ஆட்டி தூங்க வைக்கிறதுல அவங்க எக்ஸ்பர்ட். நானெல்லாம் அவ சீக்கிரமா தூங்கணும்ன்னு கொஞ்சம் நல்லா வேகமா ஆட்டுவேன், அவங்களோ ரொம்ப பொறுமையா நிதானமா ஆட்டி தூங்க வைப்பாங்க.

நிலாக்கு மூணு மாசம் முடியிற நேரத்திலே என்னோட விசாவும் முடியிற மாதிரி இருந்ததால சவுதிக்கு போக வேண்டிய கட்டாயம். அதனால, ரியாத்க்கு ஜூட் விட்டாச்சு. இங்கே ரியாத் வந்ததும் க்ளைமெட் அவளுக்கு சுத்தமா செட் ஆகல. சளி பிடிச்சு கஷ்டப்பட்டா. இந்தியால நிறைய பேர் சுத்தி இருந்துட்டு திடீர்ன்னு வந்த தனிமை அவளை ரொம்பவே கஷ்டப்படுத்திடுச்சு. குட்டிநிலா ரொம்பவே டல் ஆகிட்டாங்க. வீட்டுல அப்பாவும் அம்மாவும் மட்டும் தான், அப்பாவும் சாயந்திரம் தான் வருவாங்க, அம்மா கூட தான் முழுநேரமும் ஓட்டணும். அவளுக்கு ரொம்பவே போர் அடிச்சிடுச்சு. நைட்ல்லாம் திடீர்ன்னு பயந்துகிட்டு அழுவா. நிலாவுக்கும் அம்மாவுக்கும் இங்கே வழக்கம் போல நைட் ட்யூட்டி ஸ்டார்ட் ஆச்சு. ரெண்டு பேரும் விடிய காலைல உட்கார்ந்துகிட்டு டிவி பார்த்துக்கிட்டு இருப்போம். எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு மாசம் ஓட்டியாச்சு. பிறகு, சவுதில குளிர் ரொம்ப அதிகம் ஆனதால இந்தியாவுக்கே திரும்பி வந்துட்டோம்.

நிலா திரும்ப இந்தியா வந்தப்போ யார்கிட்டேயும் போகாம ரொம்ப அடம் பிடிச்சு அழுதா. ஆயா, அத்தை, தாத்தா யாரைப் பார்த்தாலும் அழுகை தான். மூணு நாலு நாள்ல மேடம் பேக் டூ ஃபார்ம்க்கு வந்துட்டாங்க. நிலாவும் பெரிய அத்தையும் சாயந்திரம் ஆனா கச்சேரி ஆரம்பிச்சிடுவாங்க, ஒரே ஆட்டம் தான். அவங்க அத்தை தாளம் போட, நிலா சூப்பரா கைய காலை அசைச்சுகிட்டு டான்ஸ் ஆடுவாங்க. நிலா நாலு மாசம் வரைக்கும் நைட்டெல்லாம் சரியா தூங்காம இருந்தா, அப்போ அவங்க பெரிய அத்தை சும்மா கிண்டலுக்காக "அது எப்டி நிலா நீ பகலெல்லாம் அம்பியா இருக்கே, சாயந்திரம் ரெமோவா மாறி கைய கால ஆட்டிட்டு ஜாலியா விளையாடுற, நைட் மட்டும் ஏன் அந்நியனா மாறிடுறேன்னு (சும்மா கிண்டலுக்குடா நிலாக்குட்டி, கோச்சிக்காதே ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்) கேட்டாங்க. அதுக்கு அவங்க நடு அத்தை "புள்ளைய போய் ஏன் அப்படில்லாம் சொல்றிங்க"ன்னு சண்டைப் போட ஆரம்பிச்சிட்டாங்க. நிலாக்கு மூணு அத்தைங்க கிடைச்சது ஒரு பெரிய கிஃப்ட்டுன்னு தான் நினைக்கிறேன். நடு அத்தைக்கு பையன் இருக்கிறதால மருமகளை ஸ்பெஷலா கவனிப்பாங்க. "மாமியார்ன்னு ஒரு மரியாதை இல்லாம என்னடி ஓவரா ஆட்டம் போடுறேன்"னு அவளை சும்மா வம்பு வளர்த்துக்கிட்டு சண்டைப் போடுவாங்க. அவளும் சூப்பரா சண்டைப் போடுவா. அவங்க அத்தை சவுண்டு விட்டா இவளும் பதிலுக்கு சவுண்டு விடுவா, வேற யார்கிட்டேயும் சண்டைப் போட மாட்டா. அதையெல்லாம் அப்போ ரெக்கார்ட் பண்ணாம விட்டுட்டேன்னு இப்போ வருத்தமா இருக்கு (அப்போல்லாம் நிலாவுக்காக ஒரு வலைப்பதிவு எழுதப் போறேன்னு தெரியாம போய்டுச்சு :-) ). கடைக்குட்டி அத்தை நிலாவைப் பாட்டுப் பாடியே கரெக்ட் பண்ணிட்டாங்க. நிலாவுக்கு கொஞ்சம் குத்துப்பாட்டெல்லாம் அறிமுகம் செஞ்ச பெருமை அவங்களையே சாரும். "வேர் ஈஸ் த பார்ட்டி", "டாடி மம்மி வீட்டில் இல்லே"ன்னு பாட்டுப் பாடியே நிலாக்கு செரிலாக்கெல்லாம் ஊட்டி விடுவாங்க.

நிலா - நிலாவும் அம்மாவும் மட்டுமில்ல. நிலா, அம்மா, அப்பா, அத்தைகள், மாமாக்கள், மாமி, அத்தாச்சிகள், அத்தான், தாத்தாக்கள், பாட்டி, ஆயான்னு ஒரு பெரிய கூட்டமே இருக்கு. எழுத தான் கை வலிக்குது :-).

Monday, March 16, 2009

நிலாவும் அம்மாவும்

கொஞ்சியவர்கள் (4)
எந்த தாயாவது பச்சைக்குழந்தைக்கிட்டே கோபப்படுவாளா? “அப்படில்லாம் கோபப்படுவாங்களா என்ன, அவளுக்கு என்ன கிறுக்கா, அவ என்ன ராட்சஸியா?”ன்னு நீங்க கேக்கறதெல்லாம் என் காதுல விழுது. ஆமாம், தவமாய் தவமிருந்து பெற்ற நிலாகிட்டேயே நான் ஓரிரு சமயங்கள்ல கோபபட்டிருக்கேன். அது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்ன்னு அப்போ எனக்குப் புரியல. இப்போ அதை நினைச்சுப் பார்த்தா கஷ்டமா தான் இருக்கு. பொதுவாவே எனக்கு ஒரு இரவு சரியா தூங்கலைன்னாலும் ரொம்பவே டையர்ட் ஆகிடும். நிலா வந்ததுக்கு அப்புறம் பல இரவுகள் தூங்காமலே கழிச்சிருக்கேன். அவ தினமும் சரியா பண்ணிரெண்டுலேர்ந்து ஒரு மணிக்குள்ளே முழிச்சிடுவா, அதுலேர்ந்து காலைல ஆறு ஏழு மணி வரைக்கும் தூங்காமலே இருப்பா. சில நாட்கள்ல மேடம் தூங்க ஆரம்பிக்கிறதே மூணு நாலு மணியா தான் இருக்கும். எங்க ரூம்ல எங்களுக்காக ஒரு டிவி இருக்கும், சன் மியூசிக் போட்டுவிட்டுட்டு ரெண்டு பேருமா பாட்டுக் கேட்டுட்டு இருப்போம். அப்பவும் மேடம் சுகவாசி தான், பெட்ல படுத்து பாட்டுக் கேக்க மாட்டாங்க, அம்மா மடில படுத்து தான் கேப்பாங்க.

நிலாவ தூங்க வைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம். அவங்கள மடில போட்டு ஆட்டிக்கிட்டே பாட்டுப் பாடணும், அப்போ தான் தூங்குவாங்க. எங்க வீட்டுல நிலா முதல் பேரக்குழந்தைங்கிறதால எல்லாருக்குமே பாசம் ரொம்ப அதிகம். என் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணின்னு எல்லோருமே அவளை மடில போட்டுத் தாலாட்டுவாங்க. அதுக்காக நடுராத்திரில அவங்களை எல்லாம் எழுப்ப முடியுமா? அதுவும் எங்க அண்ணன் அண்ணி புதுசா கல்யாணம் ஆனவங்க, எங்க அப்பாவோ கடை வச்சிருக்கிறவர். அவருக்கு காலைல எழுந்து கடையத் திறக்க வேண்டிய வேலை இருக்கும், நைட் பத்து மணிக்கு தான் வீட்டுக்கு வருவார், பகல்லேயும் ரெஸ்ட் கிடையாது. எப்படியோ என்னால முடிஞ்ச வரைக்கும் சமாளிப்பேன், முடியலைன்னா அம்மாவை எழுப்புவேன். அம்மாவுக்கும் பகல்ல வேலை அதிகமா இருந்ததால கொஞ்ச நேரம் பார்த்துப்பாங்க, அப்புறம் அப்பா தான் பார்த்துப்பாங்க. “சரிப்பா நீங்க நிலாவைப் பார்த்துக்கோங்க”ன்னு சொல்லிட்டு நான் போய் படுக்கவும் முடியாது, படுக்க மனசும் வராது. புள்ளைக்கு பாவம் பசி வந்துட்டா என்ன பண்றதுன்னு யோசனையா இருக்கும், அதனால அப்படியே பக்கத்துல சோஃபால சாய்ந்துகிட்டு கண்ணை மூடி ரிலாக்ஸ் பண்ணிப்பேன். நிறைய டைம் அப்பாவை நினைச்சா பாவமா இருக்கும். ”இன்னும் கொஞ்ச நாள் தான பார்த்துக்கப் போறிங்க”ன்னு சொல்லி சொல்லியே அவரை பார்த்துக்க வச்சாச்சு.

சரி சரி, மேட்டர்க்கு வர்றேன். நிலாகிட்டே நான் எதுக்காக கோபப்பட்டேன்னு தானே கேக்குறிங்க. நிலா தூங்காம இருந்ததுக்காக நான் என்னைக்கும் அவக்கிட்டே கோபப்பட்டது இல்லை. அவ என் பாலை குடிக்காம வம்பு பண்ணும்போது கோபப்பட்டிருக்கேன். ஆனா அவ எதுக்காக பால் குடிக்க மாட்டேங்கிறா, அவளுக்கு உடம்புக்கு எதோ பண்ணுது போலன்னுல்லாம் யோசிக்கத் தோணல. எனக்கு தூக்கமின்மை, கூடவே சி-செக்‌ஷன் பண்ணதால மடில வச்சி தொடர்ந்து ஆட்டிக்கிட்டு இருக்கும்போது வர்ற வலி எல்லாம் சேர்ந்து நிலா மேல கோபப்பட வச்சிடுச்சு. இப்போ என் நிலாக்குட்டி கிட்டே அதுக்காக ஸாரி கேட்டுக்கிறேன். “சாரிடா நிலாக்குட்டி, ஐ லவ் யூ டா பட்டு”. எங்க நிலாக்குட்டிக்கு சாரி, ஐ லவ் யூல்லாம் சொன்னா ரொம்ப பிடிக்கும் ;-) (அதுக்கு பின்னாடி ஒரு குட்டிக்கதையே இருக்கு, அதை அப்புறம் சொல்றேன்). குழந்தைங்க நிறைய விஷயங்களுக்காக அழுவாங்கன்னு அப்போ புரியல. பசிக்கு மட்டுமில்ல, நேப்பி மாத்தறதுக்கு, வயத்துவலிக்கு (அப்பா அம்மால்லாம் வயத்துவலியா இருக்கும், வுட்வார்ட்ஸ் கொடுன்னு சொல்லுவாங்க, டாக்டரை கேக்காம எதுவும் கொடுக்க மாட்டேன்னு சொல்லிடுவேன்), போட்டிருக்கிற ட்ரஸ் வசதியா இல்லைன்னா, அப்புறம் சும்மா ஜாலிக்காக இன்னும் நிறைய காரணங்கள் சொல்லலாம். அடடா, நிறைய எழுதிட்டேன்னு நினைக்கிறேன், அப்புறம் போர் அடிக்க ஆரம்பிச்சுடப் போகுது. இப்போதைக்கு ஒரு குட்டி ப்ரேக். நிலாவும் அம்மாவும் தொடரும் ........................ காத்திருங்கள்.

Sunday, March 15, 2009

நிலாவின் வருகை

கொஞ்சியவர்கள் (11)
கருவறையிலேயே இசைப்பயணத்தோடு வளர்ந்த நிலாக்குட்டி due date வந்த பிறகும் அவளோட தலையை வலுக்கட்டாயமா இறக்காமலே வச்சுட்டு இருந்ததால வேற வழியே இல்லாம ஆகஸ்ட் ஐந்தாம் தேதி 2008ம் வருடம் இரவு 7:37க்கு C-section மூலமா பிறந்தாங்க. பிறக்கும்போதே மஞ்சள் காமாலையும் லேசான மூச்சுத் திணறலும் இருந்ததால அவளை தனியா குழந்தைகளை பராமரிக்கும் ஸ்பெஷல் மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க. நான் கண் விழிச்சுப் பார்க்கும்போது ICUல இருந்தேன். நர்ஸைப் பார்த்துக் கேட்ட முதல் கேள்வி "எனக்கு என்ன குழந்தைப் பிறந்திருக்கு?" "பெண் குழந்தை"ன்னு சொன்னாங்க, ரொம்பவே சந்தோஷமா இருந்தது.

பொதுவாவே எனக்கு குழந்தைங்கன்னா ரொம்ப பிடிக்கும். மூணு ஆண் பசங்களோடவே வளர்ந்ததாலோ என்னவோ ஆண் குழந்தைங்க மேல கொஞ்சம் ஈர்ப்பு அதிகமா இருந்தது. என் கணவருக்கோ பெண் குழந்தைகள்ன்னா ரொம்பப் பிடிக்கும். நான் conceive ஆகி இருக்கும்போது என் கணவர் கிட்டே சும்மா ஒரு பந்தயம் கட்டினேன். "நான் உனக்காக பெண் குழந்தை பிறக்கணும்ன்னு வேண்டிக்கிறேன்பா, நீ எனக்காக ஆண் குழந்தை பிறக்கணும்ன்னு வேண்டிக்கோ"ன்னு. அதே மாதிரி பெண் குழந்தை பிறந்தா நான் அவர் மேல அதிகம் அன்பு வச்சிருக்கறதாவும் ஆண் குழந்தை பிறந்தா அவர் என் மேல அதிகம் அன்பு வச்சிருக்கறதாவும் அர்த்தம்ன்னு சொல்லிருந்தேன். அந்த பந்தயத்தோட முடிவுல நான் ஜெயிச்சிட்டத நினைச்சு எனக்கு அன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு, கூடவே நிலாவைப் பார்க்க முடியலையேங்கிற வருத்தம் ரொம்ப அதிகமா இருந்துச்சு. எப்படியோ சீனியர் டாக்டர் கிட்டே பர்மிஷன் வாங்கி மொபைல்ல ஒரு ஃபோட்டோ எடுத்துட்டு வந்தார் என் கணவர். அதைப் பார்த்த பிறகு தான் கொஞ்சம் நிம்மதி வந்துது. ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல ஐந்து நாட்கள் நிலாவைப் பார்க்க முடியாம கஷ்டப்பட்டேன். என் கணவர் மட்டும் காலையும் மாலையும் விசிட் அடிச்சிட்டு வருவார். "என் கை விரலைக் கொடுத்தேன், அழகா பிடிச்சிக்கிட்டா"ன்னு சொல்லுவார். கேட்கும்போது கொஞ்சம் பொறாமையா கூட இருக்கும். இப்பவும் நிலாக்காக சும்மா சின்ன சண்டைப் போட்டாலும் "அவ என் பொண்ணு, அவளை முதல்முதலா பார்தததும் நான் தான், அவ முதல்முதலா தொட்டதும் என் கைவிரலை தான்"ன்னு சொல்லி வெறுப்பேத்துவார்.

குட்டிநிலா வந்த பிறகு லைஃப் டோட்டலா மாறிடுச்சு. தூக்கமின்மையால ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். நைட்ல்லாம் தெளிவா ஆட்டம் போடுவா, பகலெல்லாம் சூப்பரா தூங்குவா. நிலாவுக்கும் அம்மாக்கும் நடந்த போராட்டங்களெல்லாம் கொஞ்சம் பொருத்திருந்து பார்ப்போம்.

Thursday, March 12, 2009

குட்டி நிலாவின் குட்டி அறிமுகம்

கொஞ்சியவர்கள் (27)
ஒவ்வொரு பொண்ணோட வாழ்க்கையிலும் குழந்தைங்க ஒரு இன்றியமையாத பங்கை வகிக்கிறாங்க. பொதுவா ஒரு பெண் தாய்மையாகும்போது தான் முழுமை அடைகிறாள்ன்னு சொல்லுவாங்க. நம்ம S.J. சூர்யா படத்துல கூட ஒரு பாட்டு “காலையில் தினமும் கண்விழித்தால்”ன்னு ஆரம்பிச்சு “தாயான பின்பு தான் நீ பெண்மணி”ன்னு வரும். நிலா பொறக்கறதுக்கு முன்னாடி இதெல்லாம் கேக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கும். முக்கியமா அந்தப் பாடலைக் கேக்கும்போது நெறைய முறை உள்ளுக்குள்ளே அழுதிருக்கேன். அந்த உணர்வுகளை குழந்தை இல்லாதவங்களால மட்டும் தான் புரிஞ்சிக்க முடியும். ஒரு குழந்தைக்காக ரொம்பவும் ஏங்கி அது கிடைச்சதுக்கு பிறகு வர்ற சந்தோஷம் ரொம்பவே சுகமானது. நிலாவைப் பத்தி எழுதணும்ன்னு ஆரம்பிச்சு என் கதைய ஓட்டிக்கிட்டு இருக்கேன், ஸாரி ஸாரி. நிலாக்குட்டி பத்தி சொல்லணும்ன்னா நிறைய விஷயங்கள் இருக்கு, ஆனா எல்லாத்தையும் எழுதறதுக்கு எனக்கு நேரம் கிடைக்குமான்னு தெரியல, முடிஞ்ச வரைக்கும் முயற்சிப்போம்.

நிலாவப் பத்திச் சொல்லணும்ன்னா “அவ ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பாசமான வாலுப்பொண்ணு”.

அதே மாதிரி, நிலாவுக்கு உங்கள பிடிக்கணும்ன்னா மூணு முக்கியமான தகுதிகள் வேணும்.

முதல்ல உங்களுக்கு பாட்டுப் பாடத் தெரிஞ்சிருக்கணும். முக்கியமா மெலடி பாட்டுகள். அதுக்காக நீங்க பெரிய சுசிலாவா இருக்கணும்ன்னு அவசியம் இல்ல. சும்மா பாடத் தெரிஞ்சிருந்தா போதும். குறிப்பிட்டுச் சொல்லணும்ன்னா “தூளியிலே ஆடவந்த” பாட்டைப் பாடத் தெரியணும்.

ரெண்டாவது, நிலாவை சூப்பரா கொஞ்சத் தெரியணும். “என் செல்லக்குட்டி, புஜ்ஜிக்குட்டி, அம்முக்குட்டி, பட்டுக்குட்டி”ன்னு கொஞ்சிட்டு பிறகு தான் நிலாவைத் தூக்கணுமே.

கடைசியா, அவங்கள தூக்கிக்கிட்டு வேடிக்கைக் காட்டணும். அது எல்லா குழந்தைக்குமே புடிச்ச விஷயம் தான்.

பொதுவா எல்லா குழந்தைகளுக்குமே பாட்டுன்னா பிடிக்கும், ஆனா நிலாவோட விருப்பம் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும். குத்துப்பாட்ட விட மெலடி பாட்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பா. நிலாவுக்கு இசை பிடிக்கும்ங்கிறது அவ என் வயிற்றுக்குள்ளே இருக்கும்போதே எனக்குத் தெரிய ஆரம்பிச்சிடுச்சுன்னு சொன்னா நீங்க நம்புவிங்களான்னு தெரியல. நான் கர்ப்பமாகி ஆறு மாசம் ஆகியும் அசைவே இல்லாம ரொம்ப பயந்துட்டு இருந்தேன். அந்தச் சமயத்திலே என் வீட்டுக்காரர் எனக்கு Pregnancy CD ஒண்ணு அனுப்பி வச்சார். அதுல பாட்டெல்லாம் இருக்காது, இசை மட்டும் தான். அந்த இசையை நான் கேக்கும்போது தான் அவ முதல் முதல்ல அசைஞ்சா. உடனே அவருக்கு ரொம்ப தேங்க்ஸ் சொல்லி சந்தோஷப்பட்டேன். இப்படி, நிலாவோட இசைப்பயணம் கருவறையிலே ஆரம்பிச்சிடுச்சு.

Monday, March 9, 2009

செல்ல நிலா

கொஞ்சியவர்கள் (2)
நிலாக்காலம் வலைப்பதிவுக்கு வருகைத் தரும் அனைவருக்கும் வணக்கம். குழந்தையின் வளர்ச்சியைப் பதிவு செய்வதென்பது புகைப்படம், ஒளிப்படம் தாண்டி வலைப்பதிவாகவும் முன்னேறியுள்ள இந்தக் காலகட்டத்தில் எங்களின் செல்ல மகள் நிலாவின் வளர்ச்சியையும் வாலுத்தனங்களையும் பதிவு செய்யும் முயற்சியே இந்த வலைப்பதிவு. இது அவள் வளர்ந்த பிறகு அவளே திரும்பிப் பார்க்கவும் உதவும் என்றும் நம்புகிறோம்.

காலையில் நிலா கண் விழிக்கும்போது அவளுக்கு குட்மார்னிங் சொல்லி அவள் பொக்கை வாயால் சிரிக்கும் மறு நிமிடமே பை பை நிலாவும் சொல்பவன் நான். குழந்தையுடன் செலவழிக்கும் நேரம் குறைவு. அதனால் இங்கே நான் பதிவு இடுவதை விட நிலாவின் அம்மாவும் சில சமயங்களில் நிலாவும் அதிகமாக பதிவிடுவார்கள். நிலாவின் ஒலிப்பதிவுகளும், தட்டச்சுப் பதிவுகளும் கூட வர வாய்ப்புண்டு.

வேறென்ன, இனி "இது ஒரு அழகிய நிலாக்காலம்"

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

கொஞ்சியவர்கள் (12)
ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

ஹேஏஏஏஏஏ

யா யா யா

ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

தா தா தா

அக்கே

பா பா பா ப்ர்ர்ர்ர்

ஹூஊஊஊ
 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez