Tuesday, October 13, 2009

நிலாவின் துபாய் பயணம்

கொஞ்சியவர்கள் (8)
துபாய் போகணும்ன்னு எப்பவோ திட்டம் போட்டது, ஏதோ சில காரணங்களால தள்ளிப் போய்கிட்டே இருந்தது. எங்க நிலாக்குட்டி ரொம்ப லக்கி தான். ஒரு வயசிலேயே துபாய் சுத்திப் பார்க்கக் கிளம்பிட்டாங்க. நிலாவைக் கூட்டிக்கிட்டு டூர் போறோம்ன்னு ப்ளான் பண்ணப்போவே நம்ம ரொம்ப சுத்திப் பார்க்க முடியலைன்னாலும் ஓரளவுக்கு சுத்தி பார்க்கணும்ங்கிற மனநிலையோட தான் கிளம்பினோம். போர்டிங் முடிச்சு ஃப்ளைட்ல ஏறி உட்கார்ந்ததும் சீட்டையெல்லாம் பார்க்கதவளுக்கு என்ன ஞாபகம் வந்துச்சோ தெரியல “தாத்தா தாத்தா”ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டா. அப்போ தான் அவ இந்தியா போகப்போறோம்ன்னு நினைச்சிக்கிட்டான்னு புரிஞ்சுது. அப்புறம் தாத்தா இல்லடா, நாம மாமாவைப் பார்க்கப் போறோம்ன்னு சொல்லி அவளை கன்வின்ஸ் பண்ண கொஞ்ச நேரத்திலே ஒரு தூக்கத்தையும் போட்டுட்டா.

பொதுவாவே நிலாவுக்கு சுதந்திரமா சுத்தணும். சாப்பிடும்போது கூட சுத்திக்கிட்டே சாபிட்டா நல்லா சாப்பிடுவா. நல்லவேளையா ஆசிஃப் அண்ணனோட கடல் போல இருந்த வீட்டுல (துபாய்ல அது பெரிய வீடு தான்) தங்கினதால நிலாவைச் சமாளிக்க முடிஞ்சுது, ஹோட்டலெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை. சகல வசதிகளோட அந்த வீட்டைக் கொடுத்த ஆசிஃப் அண்ணனுக்கு ரொம்ப நன்றி சொல்லணும். அவங்க வீட்டுல ஜாலியா சுத்தினது மட்டுமில்லாம கூடவே எல்லா பொருள்களையும் இழுத்து கீழே போட்டுக்கிட்டு என்ஜாய் பண்ணிக்கிட்டு இருந்தா. அதே மாதிரி வெளில சுத்தும்போதெல்லாம் தொல்லைக் கொடுக்காம ஜாலியா என்ஜாய் பண்ணா. வெள்ளைக்காரங்களுக்கெல்லாம் ஷேக் ஹாண்ட் கொடுத்து ஃப்ரண்டு பிடிச்சிக்கிட்டா. ஆனா, புது இடத்திலே தூங்குறதுக்கு இவ்ளோ படுத்துவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல (என்ன பண்றது, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் புது இடம்ன்னா தூக்கம் வராதே, அப்புறம் புள்ளை மட்டும் என்ன பண்ணும்).

நிலா பார்த்து என்ஜாய் பண்ணதுன்னா அது அங்கே இருந்த துபாய் ஷாப்பிங் மால்ல அக்வேரியம் போனப்போ தான். மீனையெல்லாம் கிட்டே பார்த்ததுல அவளுக்கு ரொம்பவே ஆச்சர்யம். கூட ஜெஸிலாவோட பொண்ணு ஃபாத்தீன் அவளுக்கு நல்ல கம்பெனி.

நிலாவுக்கு யாரைப் பார்த்தாலும் மாமா ஆண்ட்டின்னு சொல்லுன்னு சொல்லிக் கொடுத்தது தப்பாப் போச்சு. அவ இஷ்டத்துக்கு எல்லோரையும் மாமா, ஆண்ட்டி, பாட்டி, லேசா வெள்ளை முடி தெரிஞ்சா உடனே தாத்தான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டா. இங்கே சவுதியிலே பிரச்சனை இல்லை, ஏன்னா அவங்களுக்கு தமிழ் புரியாது. எனக்கு துபாய் போறோம்ன்னதும் முதல்ல பயம் வந்ததே அதுக்கு தான். அங்கே நிறைய தமிழர்கள் இருப்பாங்களே. அதனால அவளா யாரையாச்சும் பாட்டியோ தாத்தாவோ கூப்பிடுறதுக்கு முன்னாடி நான் ஆண்ட்டி, அங்கிள்ன்னு சொல்லிட்டா அவ அப்டியே கூப்பிடுவா. அப்படி தான் ஒரு வெள்ளைக்கார கிழவிய ஆண்ட்டின்னு நிலா கூப்பிடவும் அந்தம்மாவுக்கு சந்தோஷம் தாங்கல. கூடவே, அவங்க சொல்லிக்கொடுத்த மாதிரியெல்லாம் இவளும் செய்யவும் ஸ்மார்ட் கேர்ள்ன்னு பாராட்டினாங்க.

அதே மாதிரி, ஹோட்டல் சரவணபவன், நம்ம பிரபல பதிவர் குசும்பன் புண்ணியத்திலே ஆச்சி ரெஸ்டரண்ட் எல்லா இடத்திலேயும் சர்வரை எல்லாம் மாமான்னு கூப்பிட்டு அவங்க கிட்டே பாப்பாக்கு என்ன வேணும்ன்னு கேட்ட உடனே இட்லின்னு சொன்னதும் அவங்களுக்கும் ஆச்சர்யம் தாங்கல. மாமா மாமான்னு கூப்பிட்டதால ரொம்பவே குஷி ஆகிட்டாங்க. கடைசியா கிளம்புற அன்னைக்கு தௌ க்ரூஸ் போட்டிங் போணோம். அங்கே முழுக்க வெள்ளைக்காரங்க. மேடம் எல்லார் கிட்டேயும் தானா போய் ஷேக் ஹேண்ட்ல்லாம் கொடுத்து ஃப்ரண்ட் ஆகிட்டாங்க. இவ அவங்க அப்பா ஃபோனை வச்சிக்கிட்டு போட்ல போட்ட சீன் தாங்கலை. எல்லோரும் செம்மையா கமெண்ட் அடிச்சு சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க. ஆனா திரும்ப வந்ததும் என் வீட்டுக்காரர் மட்டும் அழுதுக்கிட்டு இருந்தார். ஹிஹிஹி வேற ஒண்ணுமில்ல, ஃபோனுக்கு ஆப்பு ஆகிடுச்சு. அந்த ஆப்பு முடிஞ்சு அடுத்த ஒரு வாரத்துல ஒரு பெரிய ஆப்பா வச்சிட்டா. நான் கிச்சன்ல ஏதோ எடுக்கப் போன நிமிஷத்துல லேப்டாப்பைப் பொறுப்பா கவுத்துப் போட்டு உஸ் (மூச்சா) அடிச்சுட்டா. அதனால தான் எப்பவோ டைப் பண்ணி வச்ச பதிவை போட முடியாம இவ்ளோ நாள் ஆகிடுச்சு (நெசமா தான் சொல்றேன், என்னை நம்புங்க). சரி, என்னோட புலம்பலை விடுவோம். நிலாவோட அடுத்த இண்டர்வியூக்கு போவோமா.....

1. கவிதா சொல்லு? (நேயர் விருப்பத்துக்காக)

2. ஐயப்பா சொல்லு? (நேயர் விருப்பத்துக்காக)

3. ஃபாத்தீன் அக்கா என்ன பாட்டுப் பாடுனாங்க?

ச்சூ ச்சூ மாயி

4. அறிவு மாமாக்கு என்னப் பாட்டுப் பிடிக்கும்?

பியா பியா ஓ பியா (சமீபத்துல நிச்சயம் ஆன எங்க அண்ணனோட ஆளு பேரு ப்ரியா. அவனை கலாய்க்கிறதுக்காக இந்த ட்ரைனிங். எப்பூடீஈஈ???)

5. அப்பா ஈ தேய்க்கும்போது எப்படி கத்துவாங்க?

உவ்வா

6. சித்தாவோட பேர் என்ன?

ப்ரபு

7. அத்தாச்சி பேர் என்ன?

காவ்யா

8.ஆயாவோட பேர் என்ன?

சல்வீஈஈஈ

9. பன்னீர் தாத்தா வந்தா பாப்பா என்ன சொல்லுவிங்க?

வாங்க (மத்த யாராவது வீட்டுக்கு வந்தா நாங்க கூப்பிடச் சொன்னா தான் வாங்கன்னு கூப்பிடுவா. ஆனா பன்னீர் தாத்தா வந்தா மட்டும் அவளாவே கூப்பிடுவா)

10. பாப்பாவைக் குளிக்கச் சொன்னா எப்படி அழும்?

ம்ஹ்ம் ம்ஹ்ம்

11. பாப்பா எப்படி சிரிப்பிங்க?

ஈ ஈஈ ஈஈ

12. பாப்பாவுக்கு எப்படி கோபம் வரும்?

ஆ...ப்

13. பாப்பாவோட செருப்பு எப்படி கத்தும்?

கீன் கீன்

14. பாப்பாக்கு எத்தனை இட்லி வேணும்?

டூ த்தீ (எது கேட்டாலும் டூ த்தீ தான்)

15. ரக்‌ஷிதா பாப்பா நிலாவை எப்படி கூப்பிடுவா?

நிலா அக்கா (இங்கே நிலாவை விட மூணு மாசம் சின்னக்குழந்தை தான் ரக்‌ஷிதா. சும்மா ஒரு நாள் விளையாட்டா ரக்‌ஷிதா உன்னை நிலா அக்கான்னு கூப்பிடுவாடான்னு சொன்னதோட விளைவு)

Get this widget | Track details | eSnips Social DNA


பின்குறிப்பு: நிலாவுக்கு துபாய்ல எடுத்த ஃபோட்டோல்லாம் பார்க்கிறதுன்னா அவ்ளோ சந்தோஷம். முக்கியமா ஃபாத்தீன் அக்கா பார்க்கிறதுல தான் குஷி அதிகம். ஃபாத்தீன் அக்கா ஃபாத்தீன் அக்கான்னு சொல்லிக்கிட்டே இருப்பா. ரெண்டு நாள் முன்னாடி ஒரு சூப்பர் மார்கெட்ல ஃபாத்தீன் சைஸ்ல ஒரு பொண்ணைப் பார்த்துட்டு ஃபாத்தீன் அக்கா ஃபாத்தீன் அக்கான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டா. அது ஃபாத்தீன் அக்கா இல்லைடான்னு சொன்னாலும் அவ கடைசி வரைக்கும் நம்பல. எத்தனையோ பேரைப் பார்த்திருந்தாலும் குழந்தைகளுக்கு குழந்தைகள் தாங்க அவங்க மனசுல நிக்கிறாங்க!

Tuesday, September 15, 2009

நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் - நிலாக்காலம்

கொஞ்சியவர்கள் (21)
ஊருக்குப் போனதுல நிலாவோட பல இனிமையான நினைவுகளைப் பகிர்ந்துக்க முடியாம போனதுல எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். என்ன தான் நான் இப்போ அதைச் சொன்னாலும் சுடச்சுட அந்தந்த விஷயங்களை பகிர்ந்துக்கும்போது கிடைக்கிற சுவாரசியமே தனி தான். அதே மாதிரி இந்த நீண்ட இடைவெளில சில பல நிகழ்வுகளை நான் மறந்தும் போயிருக்கலாம்.

குட்டிநிலாவைப் பத்தி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு. இப்போல்லாம் அவளோட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. கூடவே கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கு. மேடம் ஒரு நிமிஷம் சும்மா இருக்கிறது இல்லை. ரொம்ப வாலுத்தனம் பண்றாங்க.

ஊருக்குப் போனதும் நிலா முதல்ல கொஞ்சம் நிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் 2 அல்லது 3 அடி வச்சு நடக்க ஆரம்பிச்சு டமால் டமால்ன்னு விழுவாங்க. தாத்தா நடைவண்டி வாங்கி கொடுத்ததும் அவ முகத்துல தான் எவ்ளோ சந்தோஷம். என்னமோ அவ ஒரு பெரிய கார் ஓட்டிட்டு வர்ற மாதிரி ஒரு ஃபீலிங். எப்போ பாரு நடைவண்டி தான். அதை ஓட்டுறதுன்னா அவ்ளோ சந்தோஷம். நிறைய சமயம் டின்னர் ஊட்டிவிட எனக்கு நடைவண்டி தான் உதவி பண்ணிருக்கு. இப்படி சில மாசத்துக்கு முன்னாடி இங்கேயும் அங்கேயும் வேகமா தவழ்ந்துகிட்டு இருந்த நிலா இப்போ என்னடான்னா ததக்கா பிதக்கான்னு நடக்குறா, ஓடுறா. யப்பாஆஆஆஆஆஆ முடியலலலலலலலலலலலலலல. நிலாவோட ஒவ்வொரு விஷயங்களையும் புகைப்படம் மற்றும் வீடியோவா பதிவு பண்ண நினைச்ச நாங்க அவ ஊர்ல உடம்பு முடியாம சோர்வா இருந்ததால அவ நடக்க ஆரம்பிச்சதெல்லாம் பதிவு பண்ண முடியாமலே போய்டுச்சு.

இப்போ நிலாக்குட்டிகிட்டே தான் எவ்ளோ மாற்றம்!! நாம எது பேசினாலும் அவங்களும் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்ல முயற்சி பண்றாங்க. நானும் என் வீட்டுக்காரரும் இனிமே கிண்டலுக்கு கூட அவ முன்னாடி திட்டிக்க வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டோம். மழலைச்சொல்ன்னு கேள்விப்பட்டிருக்கோம். அதையெல்லாம் தாண்டி நிலா சில வார்த்தைகளை ரொம்ப அழகா திருத்தமா சொல்றது ஆச்சர்யமா தான் இருக்கு.

நிலாவோடு ஒரு குட்டி இண்டர்வியூ (இதோட ஆடியோ கீழே)

1. பாப்பாவோட பேர் என்னம்மா?

ந்நிலாஆஆ

2. பாப்பாவோட அப்பா பேர் என்னம்மா?

ஆஜ்ஜா (அம்மா பேரை கேக்கக்கூடாது. சொல்றது ரொம்ப கஷ்டம். எல்லாம் சொல்லிக்கொடுத்தேன், என் பேரைச் சொல்ல மாட்டேங்குறியே நிலா)

3. அப்பா எங்கேம்மா போய்ருக்காங்க?

ஆசீஸ் (ஆஃபீஸ்)

4. பாட்டி பேர் என்னம்மா?

கீத்தா

5. பாப்பாக்கு என்ன புடிக்கும்?

இட்ட்ட்லீ

6. பாப்பா ஒன் டூ த்ரீ சொல்லுங்க?

ஒன் (மட்டும் நாம சொல்லணும்) டூ த்தீ

7. பாப்பா ஒரு பாட்டுப் பாடுங்க?

சா, தீஈஈஈ (தொடையில் தாளத்துடன்), க (நாம சொல்லணும்), ம, பா (அவ்ளோ தான்)

8. காக்கா எப்படி கத்தும் (கொஞ்சம் கிறுக்குத்தனமான கேள்வி தான்)?

கா கா

9. மாடு எப்படி கத்தும்?

மாஆஆஆ

10. பூனை எப்படி கத்தும்?

ய்யாஆஆவ்வ்வ்வ்

11. நாய் எப்படி கத்தும்?

வவ் வவ்

12. குரங்கு எப்படி கத்தும்?

கொர்ர்ர்ர்ர்

13. கோழி எப்படி கத்தும்?

கொக்ககொகோ

இதெல்லாம் இல்லாம நிலா மழலையோட சொல்லும் சில வார்த்தைகள்

1. பூயி (பூரி)
2. ம்ம்மை (பொம்மை)
3. ண்ண்ணீ (தண்ணி)
4. சாயி (சாரி)
5. காங்க் யூ (தாங்க் யூ - இது அவ சொல்றப்போ எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
6. மாயீ (மாமி)
7. டை (வடை)
8. ச்சாக்கி (சாக்லேட்)
9. க்க்கர் (குக்கர்)
10. ஜூஊஊஸ் (ஜூஸ்)
11. தச்சு (தயிர்)
12. ண்ண்ணா (அண்ணா)
13. க்க்கா (அக்கா)


அம்மா, அப்பா, தாத்தா, மாமா, பாட்டி, டாடி, பால், பால் (ball), பாட்டில், சட்டை இதெல்லாம் ரொம்ப க்ளியரா வர்ற வார்த்தைகள். நிலா இந்த ரெக்கார்டிங்கு அப்புறம் இன்னும் நிறைய பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதெல்லாம் கூடிய விரைவில் அடுத்தப் பதிவாக.

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, July 7, 2009

Birthday Countdown

கொஞ்சியவர்கள் (4)
முன்பு ஒரு வலைப்பதிவில் குழந்தையின் பிறந்தநாள் கவுண்ட் டவுன் பார்த்தபோது நிலாவின் பிறந்தநாளுக்கு ஒரு மாசம் முன்னரே இப்படி ஒண்ணு நம்ம குட்டிம்மா பதிவிலும் போடணும்ன்னு நினைத்திருந்தேன். வழக்கம் போல சோம்பேறித்தனம், மறதி, அலுவலக வேலை எல்லாமும் ஒண்ணு சேர்ந்து விட்ஜெட் போட மறந்துட்டேன். நேற்று ஜெஸிலாவின் குழந்தைக்கு ஒரு வயது, இன்று வேறொரு நண்பனின் இரு குழந்தைகளுக்கு ஒரு வயது நிறைவடைவது நினைவுக்கு வந்து “அட நம்ம குட்டிம்மாவுக்கும் அடுத்த மாசம் ஒரு வயசாகப் போகுதே, இன்னும் விட்ஜெட் போடலையே” என்ற நினைவும் வந்தது. நினைவு வர்றப்போவே அதை செய்யலைன்னா பிறகு மறந்துடுவேன் (கஜினி வியாதி எனக்கும் உண்டு), அதனால மறக்காம உடனே விட்ஜெட் சேர்த்தாச்சு.

பிகு: நிலா அம்மா இப்போ சென்னையில் இருக்காங்க. மேடம் கிட்டே கணினி இல்லை, அதனால் பதிவுகள் எதுவும் எழுதல. அடுத்த மாசம் திரும்ப சவுதி பாலைவனத்திற்கு வந்த பிறகு பின்னூட்டங்களுக்கு பதில்களும், பதிவுகளும் போடுவாங்கன்னு எதிர்பார்ப்போம்.

Monday, June 22, 2009

32 கேள்விகள் - தொடர்ப்பதிவு

கொஞ்சியவர்கள் (10)
32 கேள்விகள் தொடர்ப்பதிவுக்கு என்னை அழைத்த கவிதாவுக்கு நன்றி.

கேள்விகளும் எனது பதில்களும்

1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

ஜாதகத்தின்படி “கோ” என்ற எழுத்திலே ஆரம்பிக்கணும்ன்னு அப்படி வச்சாங்க. ம்ம் பிடிக்கும். தோழிகள் ”கோம்ஸ்” என்றும் வீட்டிலும் மற்றும் உறவினர்களும் ”கோமு” என்றும் அழைப்பார்கள். என் கணவருக்கு மட்டும் இந்தப் பெயர் பிடிக்காததில் கொஞ்சம் வருத்தம்.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

ஒரு தோழியின் வீட்டில் நிலா நாற்காலியை பிடித்துக்கொண்டு நின்றிருந்தவள் அப்படியே தன் மீது நாற்காலியை சாய்த்துக்கொண்டு விழுந்துவிட்டாள். அவள் வலி தாங்காமல் அழுதபோது நானும் அழுதுவிட்டேன்.

3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

பிடிக்கும். ஏனென்றால் எங்கள் வீட்டில் என் அண்ணன்கள் தம்பியை விட என் கையெழுத்து தான் நன்றாக இருக்கும்.

4. பிடித்த மதிய உணவு என்ன?

முருங்கைக்காய் கத்திரிக்காய் மாங்காய்லாம் போட்ட சாம்பார், பருப்பு ரசம், உருளைக்கிழங்கு வறுவல்.

5. நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

யோசிக்க வேண்டிய விஷயம்.

6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

பாத்ரூம் ஷவரில் குளிக்கப் பிடிக்கும்.

7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயங்கள்: எந்த மாதிரியான நபர்களிடமும் அவர்களது குணத்துக்கு ஏற்ற மாதிரி எளிதில் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன், யாரிடமும் சண்டைப் போட்டு பேசாமல் இருந்தது இல்லை.

பிடிக்காத விஷயங்கள்: நிலாவிடம் தேவையில்லாமல் கோபப்படுவது, என் கணவர் மேல் பொஸஸிவ்வாக இருப்பது, ஒருவர் மீது வரும் முதல் அபிப்ராயத்தை கடைசி வரை மாற்றாமல் இருப்பது.

9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

பிடிச்ச விஷயங்கள்: எல்லோரிடமும் அன்பாக பழகுவது, நண்பர்களுக்காக எதையும் செய்வது, எனக்கு பிடிக்கும் என்பதற்காக விசேஷ நாள்களில் சர்ப்ரைஸ் கொடுப்பது.

பிடிக்காத விஷயங்கள்: தேவையில்லாமல் கோபப்படுவது, எப்போதும் டிவி முன்னால் அமர்ந்திருப்பது, கடலைப் போடுவது ;)

10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

நிலா பிறந்த பின் என் பாட்டி இல்லையேன்னு வருந்துகிறேன்.

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

நீலநிற ஆடை.

12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

எப்போதும் சன் மியூசிக்கில் பாட்டு கேட்பது பிடிக்கும். இப்பொழுதும் சன் மியுசிக்கில் “என் செல்லப்பேரு ஆப்பிள்” பாட்டு கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம் அல்லது கருப்பு.

14. பிடித்த மணம்?

மழைநேர மண்வாசனை, மல்லிகைப்பூ வாசம், நிலாவிடம் வரும் பால் வாசனை.

15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஃபைசா காதர் - அவங்க பதிவு முன்பு படித்திருக்கிறேன். உபயோகமான வீட்டு அலங்கார குறிப்புகள் நிறைய எழுதி இருக்காங்க. அவங்கள பத்தி தெரிஞ்சுக்கணும்ன்னு ஆசை.

மலர்ச்செல்வி - ரியாத்தில் நான் ரசிக்கும் பெண் எழுத்தாளர். நிறைய படித்திருந்தாலும் அலட்டல் இல்லாமல் இருப்பவர்.

கே.வி.ராஜா - என் கணவர் என்னைப் பற்றி என்ன சொல்றார்ன்னு தெரிஞ்சிக்கணும்ன்னு ஆசை :)))))))))))))))

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

அம்மாவின் குறிப்புகள் என்ற தலைப்பிலே அம்மாக்களின் வலைப்பதிவுகளில் இட்ட அனைத்து இடுகைகளும் பயனுள்ளதாக இருந்ததால் பிடிக்கும்.

17. பிடித்த விளையாட்டு?

சதுரங்கம், இறகுப்பந்து. இப்போதைக்கு பிடித்த விளையாட்டு நிலாவிடம் “பிடிபிடிபிடி”ன்னு சொல்லி அவளை துரத்திக்கொண்டு ஓட அவள் வேகமாக தவழ்ந்து ஓடுவது, சோஃபாவின் பின்புறம் நிலாவுடன் மறைந்துகொண்டு விளையாடுவது.

18. கண்ணாடி அணிபவரா?

இல்லை

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

மணிரத்னம் படங்கள், நகைச்சுவை திரைப்படங்கள்.

20. கடைசியாகப் பார்த்த படம்?

அருந்ததீ

21. பிடித்த பருவ காலம் எது?

இளவேனிர்க்காலம்

22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

ஒண்ணுமில்லை (சாரி அதுக்குலாம் இப்போ நேரமில்லை)

23. உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

மாதத்திற்கு ஒரு முறையாவது.

24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம்: புல்லாங்குழல் இசை

பிடிக்காத சத்தம்: ஆம்புலன்ஸ் சைரன்

25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

பஹ்ரைன்

26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எந்தக் குழந்தையையும் எளிதில் நண்பர்களாக்கிக்கொள்வது.

27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நம்பிக்கை துரோகம்

28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தளம்?

ஸ்விஸ், கேரளா

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

வாழ்க்கையில் எத்தகைய உயர்வு தாழ்வு வந்தாலும் ஒரே மாதிரி இருக்க ஆசை.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

ஷாப்பிங் (என் கணவருக்கு பொறுமை கிடையாது)

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

"Life is like an ice-cream, enjoy it before it melts"

Wednesday, May 27, 2009

ம்மாஆஆஆஆஆ

கொஞ்சியவர்கள் (3)
நிலாவோட ஆயாவும் தாத்தாவும் இப்போ சவுதி வந்திருக்காங்க, அதனால நிலாவோட அம்மா ரொம்பவே பிஸி ஆகிட்டாங்க. நிலாவைப் பத்தி எழுதக் கூட நேரம் இல்லை. குட்டிநிலாவுக்கு வேற பாவம் நடுவிலே காய்ச்சல். இப்போ தான் ஒகே ஆனாங்க. அதனால வலைப்பதிவு பக்கம் வரவே முடியல, அதுக்குள்ளே நிலாவைப் பத்தி எழுதறதுக்கும் கொஞ்சம் விஷயங்கள் கிடைச்சிருக்கு:

  • நிலாவுக்கு காய்ச்சல் வர்றதுக்கு முன்னாடி தான் "ம்மா" சொல்ல ஆரம்பிச்சாங்க. காய்ச்சல் வந்ததும் "அம்மே அம்மே"ன்னு நிறைய முறை கூப்பிட்டதைப் பார்க்கும்போது பாவமா இருந்துச்சு (சோகத்திலும் சுகம்)


  • குட்டிநிலா இப்போ சூப்பரா பை சொல்லக் கத்துக்கிட்டாங்க. அவங்க பை சொல்ற அழகே தனி தான். அவங்க குட்டி கையை அழகா அவங்க முகத்துக்கு நேரா திருப்பி வச்சுக்கிட்டு வேகமா கைய அசைச்சு அவங்களுக்கே அவங்க சூப்பரா சொல்லிக்கிறாங்க (எனக்கு என்னமோ அவங்க பை சொல்றது மட்டும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்)


  • எப்போவாச்சும் நிலா சாப்பிடாம அடம் பிடிக்கும்போதெல்லாம் "நிலா அம்மாவுக்கு வேணாம் போ"ன்னு விளையாட்டா நான் சொல்ல ஆரம்பிச்சதுல இப்போ மேடம் எது சாப்பிடக் கொடுத்தாலும் "னாணாம் னாணாம்"ன்னு அழகாச் சொல்றாங்க (இனிமே அம்மா னாணாம் சொல்ல மாட்டேன் ஸாரி நிலா).


  • முன்னாடில்லாம் "ஷேக் ஹேண்ட்ஸ் நிலா" சொல்லிக் கொடுப்பேன். அப்போல்லாம் செய்ய மாட்டாங்க, இப்போ நாலு நாலா நிலா எல்லோருக்கும் சூப்பரா கை கொடுக்கிறாங்க. (ஆரம்பிச்சுட்டா டா ட்ரைனிங் செஸன்னு தயவு செய்து யாரும் என்னை திட்டாதிங்கஅஅஅஅ)


  • நிலா இப்போ நாம செய்றது பேசறதெல்லாம் ரொம்பவே கவனிக்க ஆரம்பிச்சுட்டா. ஒரு நாள் ஒரு காமெடி நடந்துச்சு. அவங்க தாத்தா சோஃபால படுத்துக் குறட்டை விட்டு தூங்கிட்டு இருந்தாங்க. நிலா கீழ உட்கார்ந்துகிட்டு அவங்கள ரொம்ப நேரமா உத்துப் பார்த்துக்கிட்டே இருந்தா. எதுக்காக அப்படி பார்க்கிறான்னு எனக்கும் என் கணவருக்கும் ஒண்ணும் புரியல. நாங்களும் பெருசா கண்டுக்கல. கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா அவங்க தாத்தா மாதிரியே உதட்டை வச்சுக்கிட்டு குறட்டை விட்டு காமிக்கிறாங்க. எங்க ரெண்டு பேருக்கும் சிரிப்பு தாங்க முடியலை. (ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல)


  • நிலாவோட அப்பாவுக்கு பிறந்தநாள் வர்றதால "ஹேப்பி பர்த்டே டூ யூ" பாட்டை கை தட்டிப் பாடிச் சொல்லிக் கொடுத்தேன். அவளும் "ஹேப்பி பர்த்டே டூ யூ" பாடினா போதும், உடனே கை தட்ட ஆரம்பிச்சிடுவா. அப்புறம் முடிஞ்ச உடனே கை கொடுக்கணும்ன்னு சொல்லிக் கொடுத்தேன். நிலாவும் சூப்பரா செய்ய ஆரம்பிச்சுட்டா. அநேகமா இந்த முறை அவங்க அப்பாவுக்கு இது தான் பெரிய பர்த்டே கிஃப்ட்டா இருக்கும்ன்னு நினைக்கிறேன் (இந்த ஊர்ல பெண்கள் தனியா போய் கிஃப்ட்டும் வாங்க முடியாது. அப்படியும் என் நண்பர்கள் மூலமா ரெண்டு முறை வாங்கி கொடுத்திருக்கேன். இந்த முறை வெளில போக முடியாததால சீப் & பெஸ்ட் கிஃப்ட்:-) அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)


  • நிலாவோட அப்பாகிட்டே ஒரு நாள் "நான் தான் புள்ளைக்கு புதுசா எதுனா சொல்லித் தர்றேன். நீ(ங்க) எதுவும் சொல்லித் தர மாட்டிங்களான்னு கேட்ட உடனே அவர் "நான் தான் அவளுக்கு பிச்சு பிச்சு சொல்லிக் கொடுத்திருக்கேனே"ன்னு சொன்னார். ஆமாம், நிலாவை யாராச்சும் எதுனா திட்டினா அவ திருப்பி "பிச்சு பிச்சு"ன்னு ஆள்காட்டி விரலால காமிக்க ஆரம்பிச்சுட்டா. அவர் சும்மா ஸ்டார்ட் பண்ணி விட்டார். ஆனா நம்ம தான் அதையும் முறையா சொல்லிக் கொடுத்தோம்ல (நம்ம எதுனா கோபமா சொன்னா மேடம் நமக்கே பிச்சு பிச்சுங்கிறாங்க, ஒண்ணும் பண்ண முடியல)


இந்த இருபது நாள்ல நிலா கிட்டே எவ்ளோ மாற்றங்கள்ன்னு நீங்க எல்லாம் ஆச்சர்யப்படுறது புரியுது. சில விஷயங்கள் அவளுக்கு முன்னாடியே தெரியும், பை சொல்றது, ஷேக் ஹேண்ட்ஸ் கொடுக்கறதெல்லாம். ஆனா திடீர்ன்னு தான் அவ இதெல்லாம் ஒழுங்கா செய்ய ஆரம்பிச்சா. உண்மையிலேயே ஒன்பது மாசம் முடிஞ்சதுக்கு அப்புறம் நிலா கிட்டே நிறைய மாற்றங்கள். அதெல்லாம் பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு, ஒரு வித்தியாசமான அனுபவமாவும் இருக்கு.

Tuesday, May 5, 2009

மரூன் கலரு ஜிங்குச்சான்

கொஞ்சியவர்கள் (8)
நிலாவைப் பற்றிய ஒரு முக்கியமான அழகான குட்டியான விஷயத்தை நான் பதிவுல போடவே மறந்துட்டேன். அதை நினைவுபடுத்திய என் கணவருக்கு நன்றி. பொதுவாவே பெண் குழந்தைகளுக்கு தான் விதம் விதமா ஆடைகள் கிடைக்குது. ஃப்ராக், மிடி, ஸ்கர்ட் & டாப், ஜீன்ஸ் & டாப், காக்ரா ச்சோளி, ஷராரா இப்படி ஏகப்பட்ட வகைகள். எவ்ளோ தான் புதுசு புதுசா உடைகள் வந்தாலும் நம்ம பாரம்பரிய பட்டுக்கு தனி மவுசு தான். அதுவும் பெண் குழந்தைகளுக்கு பட்டுப் பாவாடை கட்டினாலே ஒரு தனி அழகு வந்துடும்.

நிலாவோட முதல் பிறந்த நாளுக்காக முன்கூட்டியே பட்டுப்பாவாடை சட்டை ஊர்லேயே எடுத்துத் தைக்கலாம்ன்னு நான், என் நாத்தனார், மாமியாரோட நிலாவையும் கூட்டிக்கிட்டு நல்லிக்குப் போயிருந்தோம். அப்போ நிலாவுக்கு ஐந்து மாசம் தான் முடிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். கடைக்காரர் எல்லா சட்டைகளையும் ஒண்ணு ஒண்ணா எடுத்துப் போட்டுக் காமிச்சுட்டு இருந்தார். அதிலே எங்களுக்கு ரெண்டு சட்டை ரொம்ப பிடிச்சிருந்துச்சு. ஒண்ணு பச்சை கலர், இன்னொண்ணு மரூன் கலர். அப்போ தான் என் மாமியார் "பேசாம இது ரெண்டுத்துல நிலாவையே ஒண்ணு செலக்ட் பண்ணச் சொல்லுவோம்"ன்னு ஒரு யோசனைச் சொன்னாங்க. அதுவும் நல்ல ஐடியா தான்னு சொல்லி அவ கிட்டே காமிச்சோம். அவ அழகா அவளோட குட்டி கையால மரூன் கலரைத் தொட்டா. சரி, பளிச்ன்னு இருக்குன்னு செலக்ட் பண்றா போலன்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் கடைக்காரர் வேற கலர் சட்டைய காமிங்கன்னு அவரா ஒண்ணு எடுத்துக் கொடுத்தார். அப்பவும் அந்த மரூன் கலரை தான் தொட்டாங்க. திரும்ப இன்னும் ரெண்டு ட்ரஸோட சேர்த்துக் காட்டினோம். அப்பவும் மரூன் கலர் தான். எனக்கோ ஆச்சர்யம். சரி, அவ பக்கத்திலே மரூன் சட்டை இருக்கிறதால தான் அதை சுலபமா செலக்ட் பண்றா போலன்னு வேற மாதிரி மாத்திக் காட்டினோம். என் மாமியார் ரெண்டு கலர் சட்டைகளும், என் நாத்தனார் ரெண்டு கலர் சட்டைகளையும் கையிலே எடுத்து வச்சிக்கிட்டு மரூனை அவ கைக்கு கொஞ்சம் எட்டாத மாதிரி தள்ளி வச்சு காட்டினோம். அப்பவும் அவங்க ரெண்டு கையையும் அழகா கொண்டு போய் அதே மரூன் சட்டையிலே வச்சாங்க.

குழந்தைங்க வாக்கு தெய்வ வாக்கு மாதிரின்னு சொல்வாங்கன்னு கடைக்காரர் ஆச்சர்யப்பட்டுச் சொல்லவும், நாங்களும் கொஞ்சம் ஆச்சர்யத்தோடயே அவ செலக்ட் பண்ண அதே சட்டைய வாங்கிட்டு வந்துட்டோம். நிலா அதிர்ஷ்டக்காரங்க தான் ஐந்து மாசம் இருக்கும் போதே அவங்க சட்டையை அவங்க விருப்பப்படி எடுக்குறாங்க நானெல்லாம் காலேஜ் போற வரைக்கும் என் விருப்பப்படி சட்டை எடுத்ததே இல்லை ஹும்ம்ம்ம்..... சரி குட்டி நிலாவோட சட்டையை பார்ப்போமா?

Tuesday, April 21, 2009

கை தட்டித்தட்டி அழைத்தாளே

கொஞ்சியவர்கள் (17)
ஒரு பெண் எப்பொழுது பொறுமைசாலி ஆகிறாள்ன்னு என்கிட்டே கேட்டா, கண்டிப்பா அம்மா ஆனதுக்கு அப்புறம் தான்னு சொல்லுவேன். ஏன்னா, நிலாக்குட்டி பிறந்ததுக்கு அப்புறம் கொஞ்சம் பொறுமைசாலி ஆகி இருக்கேன். ஆனால், இன்னும் பொறுமைசாலி ஆக வேண்டி இருக்கு. நிலாக்குட்டி வந்த பிறகு என்கிட்டே நிறைய மாற்றங்கள் இருக்குற மாதிரி நிலாக்குட்டியும் நிறையவே மாறி இருக்காங்க. இன்னையோட நிலாக்கு எட்டரை மாசம் ஆகப் போகுதுன்னு நினைக்கும்போது ஆச்சர்யமா தான் இருக்கு. நாள்கள் ரொம்ப வேகமா ஓடுது. இந்த எட்டரை மாசத்திலே நிலாக்குட்டிக்கிட்டே எவ்ளோ மாற்றங்கள்!!!



  • சுத்தமா மொட்டையா இருந்த நிலாவோட தலையிலே இப்போ முடியெல்லாம் வளர்ந்திருக்கு

  • அமைதியா இருந்த நிலாக்குட்டி இப்போ ரொம்ப வாலு ஆகிட்டாங்க (அம்மாவுக்கு தான் செம்ம வேலை வைக்கிறாங்க)

  • பொக்கையா இருந்த நிலாவுக்கு கீழே ரெண்டு பல் வளர்ந்து இப்போ மேலேயும் புதுசா ரெண்டு பல் வரப்போகுது (அம்மாவை சூப்பரா கடிக்கிறாங்க)

  • கையை வச்சு நீச்சல் அடிக்கிற மாதிரி தவழ்ந்துகிட்டு இருந்த நிலா இப்போ கொஞ்சம் முட்டிப்போட்டுத் தவழ ஆரம்பிச்சிட்டாங்க.

  • பொறக்கும்போது கொஞ்சம் கலர் கம்மியா இருந்த நிலா இப்போ கலராகிட்டாங்க.

  • எது பேசினாலும் பதிலுக்கு பொக்கைச்சிரிப்பு மட்டுமே சிரிக்கிற நிலா இப்போ என்ன சொல்றோம்ங்கிறத கவனமா கேட்டு ஓரளவுக்கு புரிஞ்சிக்கவும் செய்றாங்க. மூணு நாளைக்கு முன்னாடி "clap your hands நிலா"ன்னு நானும் கையைத் தட்டிச் சொல்லிக்கொடுத்தேன். கொஞ்ச நேரத்திலேயே சுலபமா கத்துக்கிட்டாங்க. உடனே திரும்பவும் செஞ்சாங்க. அதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி sit, standல்லாம் சொல்லிக்கொடுத்திருக்கேன். அப்போல்லாம் உட்கார மாட்டாங்க. இப்போ என்னடான்னா என் கையைப் பிடிச்சிக்கிட்டு சூப்பரா சொன்னதைச் செய்றாங்க. ஆனால் sit, stand செய்றப்போ வேணும்ன்னே clap your hands செய்ய மாட்டேங்கிறாங்க (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்).



நிலாக்குட்டிக்கு தோற்றத்திலேயும் வளர்ச்சியிலும் வர்ற மாற்றங்கள் சாதாரணமானது தான். ஆனால், பொறந்ததுலேர்ந்து அவங்க கிட்டே மாறாத விஷயங்கள்ன்னு சிலது இருக்கு, அது இன்னமும் அப்படியே தான் இருக்கு.


  • நிலாக்கு தூக்கம் வரலைன்னா பாட்டுப் பாடணும். எந்த சாப்பாடு கொடுத்தாலும் அம்மா ரைம்ஸ் இல்லைன்னா பாட்டு பாடி தான் ஊட்டி விடணும் (ரொம்ப பசில இருந்தா மட்டும் தேவையில்லை).

  • நிலா முகத்திலே யாராவது கையை வச்சா மேடம்க்கு செம்ம கோபம் வரும்.

  • யாராச்சும் உடனே தூக்கினா கொஞ்சம் சினுங்குவாங்க. கொஞ்சி பாட்டுப் பாடி சிரிக்க வச்சு தான் கரெக்ட் பண்ணணும்.

  • அவ பக்கத்திலே அம்மா அப்பா படுத்துக்கிட்டு இருக்கும்போது நடுல திடீர்ன்னு முழிச்சாலும் பொறுப்பா அவங்க அப்பாவை கொஞ்சம் கூட தொந்தரவு பண்ணாம என் மேல வந்து கைய வச்சி தட்டித் தட்டி எழுப்பி, எழுந்துக்கலைன்னா முடிய பிடிச்சு இழுத்து எழுப்புவாங்க.).



இது எல்லாத்தையும் விட முக்கியமானது, அம்மா எதாவது கோபிச்சிக்கிட்டு திட்டினாலும் அடுத்த நொடியே அதை மறந்துட்டு எப்பவும் போல பாசத்தோட இருக்காங்க எங்க பாசக்கார நிலாக்குட்டி.
 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez