Wednesday, May 25, 2011

நிலா சொன்ன "சேட்டை நிலா" கதை

கொஞ்சியவர்கள் (9)
ஒரு ஊர்ல ஒரு சேட்டை நிலா இருந்துச்சாம்

ம்ம்

அது காலைல ஈ தேய்க்க அழுவுமாம்

ம்ம்

அப்றம் குளிக்கிறப்போ சோப்பை கைல கைல எடுத்து இப்டி இப்டி தேய்ச்சுக்குமாம்

ம்ம்

அப்றம் பாலைக் குடிக்க மாட்டேன்னு அழுவுமாம்

ம்ம்ம்

ஆயா தாத்தாவை அடிக்குமாம்

என்னது அடிக்குமா?

இல்லப்பா சும்மா கொஞ்சும்

ம்ம்

லயா பாப்பா மேல ஏறி உக்காருமாம்

பேட் கேர்ள்

கதைய கேளு

ம்ம் சரி சொல்லு

எண்ணெய எடுத்துத் தலைல ஊத்திக்குமாம்

ம்ம்

லோஷனை எடுத்து கைல ஊத்தி கீழல்லாம் கொட்டுமாம்

ம்ம்

பவுடரை எடுத்து மூஞ்சுல உடம்புல கீழல்லாம் கொட்டிப் பூசுமாம்

ம்ம்

சாப்பாட்டை வாய்ல வச்சிக்கிட்டு அழுமாம்

ம்ம்

தண்ணியே குடிக்காதாம்

ம்ம்

ஜூஸ் கொடுத்தா அழுமாம்

ம்ம்

நைட்டு தூங்கப் போறப்போ கை சொப்புமாம்

ம்ம்

அவ்ளோ தான் கதை முடிஞ்சிடுச்சு, இன்னும் ஏன் ம்ம் போடுற

Monday, March 15, 2010

நாட்டி நிலா 15-03-2010

கொஞ்சியவர்கள் (6)
பொதுவாவே எழுதுறதுனா எனக்கு ரொம்ப சோம்பேறித்தனம். என் தோழிகள், என் கணவர் எல்லாருமே கடிதம் எழுதுன்னு சொல்லி கேட்டுருக்காங்க. ஆனால் நான் இதுவரைக்கும் எழுதுனதே இல்லை. அப்படிப்பட்ட என்னையை நம்பி இவங்க அப்பாவும் ப்ளாக் ஆரம்பிச்சுட்டார். அதுக்காகவாவது எழுதித் தானே ஆகணும். எழுதுறேன்.

எங்க குட்டி நிலா ரொம்பவே பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் ஊருக்கு போனதுக்கு அப்புறம் நிறைய வார்த்தைகள் சுலபமா வர ஆரம்பிச்சிடுச்சி. அவங்களோட லூட்டியை கொஞ்சம் பார்ப்போமா?

என் தம்பியும் நிலாவும் எப்பவும் விளையாடிட்டு இருப்பாங்க. அவன் நிலா ஒடுனா அவ கையைப் பிடிச்சிப்பான். அவ ”கை கை”ன்னு கத்துவா. நான் உடனே அவனைத் திட்டுவேன் ”ஏன் குழந்தை கையை பிடிக்குற, பிஞ்சு கை டா அது”ன்னு சொல்லுவேன். இதுமாதிரி இரண்டு சமயம் நடந்துச்சு. அப்புறம் ஒரு நாள் மேடம் அவங்களா அவன்கிட்ட கையை கொண்டு போய் வேணும்னே கொடுத்துட்டு ”அம்மா கை கை”ன்னு கத்துனா. நான் அவனை திட்டினவுடனே ”பிஞ்சு கை டா இது”ன்னு இவங்களே சொல்ல நாங்கல்லாம் சிரிக்க என் தம்பியோ ”இந்த வயசுலயே என்ன வில்லங்கம் பாரு அதுவா கையை கொடுத்துட்டு என்ன டயலாக் விடுது”ன்னு புலம்பினான்.

*************************************************

ஓரு நாள் குளிப்பாட்டிட்டு இருக்கும் பொழுது கால்ல சோப்பு போட்டுட்டு இருக்கேன் “அம்மா விழுந்துட போறேன்மா”ன்னு சொன்னா. என்னடான்னு திரும்ப கேட்டப்போ “பாப்பா விழுந்துட போறேன்மா பார்த்து மா”ன்னு சொன்னா ”பாப்பா விழ மாட்ட டா அம்மாவைப் பிடிச்சிக்க்கோ”ன்னு சொன்னதும் தான் அமைதி ஆனாங்க.

*************************************************

ஓரு வாரம் முன்னாடி தமிழ் ரைம்ஸ் CD கேட்டுட்டு இருந்தோம் அதுல “கரடி மாமா” பாட்டு ஓடுச்சு. கொஞ்ச நேரம் கழித்து ஒரு நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போ நான் நிலாவைக் குளிப்பாட்ட கூட்டிட்டுப் போயிட்டேன். நிலா அவளா பாட்டு பாடுனா “கரடி மாமா கரடி மாமா எங்கே போறீங்க?” திடீர்னு என்ன தோணுச்சோ தெரியலை “பன்னீர் தாத்தா பன்னீர் தாத்தா எங்கே போறீங்க? காட்டுப்பக்கம் வீடிருக்கு அங்கே போறேங்கன்னு” அதே மெட்டோட பாட ஆரம்பிச்சுட்டா. எனக்கு சிரிப்பு தாங்கலை. நல்ல வேளையாக அந்த நண்பர் காதுல விழலை.

*************************************************

ஒரு நாள் அவளோட பைல இருக்குற குட்டிக் குட்டிப் புத்தகத்தை எல்லாம் திடீர்னு வேக வேகமா எடுத்து கொஞ்சம் அங்கயும் இங்கயுமா கொட்டுனா. எனக்கு ஒண்ணும் புரியலை. ”என்ன டா செய்றே”ன்னு கேட்டேன். ஒரு நீட்டு துடைப்பத்தை எடுத்துட்டு வந்து ”அம்மா கூட்டி செய்றேன்மா”ன்னு புத்தகத்தையும் சேர்த்து பெருக்குறாங்க. ”முடியலை டா சாமி”ன்னு நினைச்சுக்கிட்டேன்.

*************************************************

நிலாவுக்கு உடம்பு சரி இல்லாம இருந்தப்போ அடிக்கடி மருத்துவமனை போக வேண்டி இருந்தது. மருத்துவமனை போனதுமே அவங்க முகம் லேசா மாறும். டாக்டர் ரூமுக்கு போனதுமே அழுகை ஆரம்பிச்சுடும். அப்படி தான் ஒரு நாள் அழுதுகிட்டு இருந்தா. நான் ”டாக்டர் தாத்தா ரூம்ல சாமி இருக்கு பாருடா”ன்னு சொன்னதும் உடனே இவங்க கையைக் கூப்பி ”பெருமாள் சாமி காப்பாத்து”ன்னு அழுதுகிட்டே சொல்ல, டாக்டரே சிரிக்க ஆரம்பிச்சுட்டார்.

*************************************************

குட்டி நிலா இப்போல்லாம் எனக்கு உதவி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு நாள் துணி மடிச்சுட்டு இருந்தேன். அவளும் அங்கே வந்தா. சரின்னு அவங்க அப்பாவோட சாக்சை எல்லாம் எடுத்து ”ஒரு பைல போடு”ன்னு சொல்லி அவக்கிட்ட கொடுத்தேன். அவளும் பொறுப்பா எடுத்து அழகா போட்டா. எனக்கே ஆச்சர்யம் தாங்கலை. ”பாப்பா அம்மாவுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணிங்க தாங்க்யூ டா செல்லம், ஐ லவ் யூ டா செல்லம்”னு சொல்லி ஒரு குட்டி ஜெம்ஸ் சாக்லேட் கொடுத்தேன். அவளும் ”தாங்க்யூ”ன்னு வாங்கிக்கிட்டா. அடுத்த நாள் ஹாலை சுத்தம் செஞ்சுட்டு இருந்தேன். அவளும் கூட வந்து பொம்மையலாம் எடுத்து வச்சா. ”தாங்க்யூ டா செல்லம் அம்மாக்கு ஹெல்ப் பண்ணதுக்கு”ன்னு சொன்னவுடனே ”அம்மா சாக்கி”ன்னு கையை நீட்டுறாங்க.

*************************************************

நிலா ”பசங்க” படத்துல வர்ற அன்புக்கரசு IAS மாதிரி தான். எது செஞ்சாலும் அவங்களுக்குக் கை தட்டணும். பாராட்டு ரொம்ப முக்கியம். அவங்களே சில சமயம் ”வெரி குட்”னு சொல்லிப்பாங்க. அவகிட்ட ரொம்ப மல்லுக்கட்ட வேண்டியதுனா தண்ணி குடிக்க வைக்க தான். அதுவும் டம்ளரில் குடிக்க வைக்குறதுன்னா ரொம்பவே கஷ்டம். இப்பவும் அவளுக்கு டம்ளரில் குடிக்கத் தெரியாது. விளையாட தான் செய்வா. ஒரு நாள் எல்லாரும் கை தட்டுறோம் நீ தண்ணி குடின்னு நான். என் அண்ணன், தம்பில்லாம் சொன்னவுடனே ஆர்வமா வாங்கிக்கிட்டாங்க. வாங்கிக்கிட்டு வாய்ல வைக்க போனவ சீரியஸா டி.வி பார்த்துட்டு இருந்த மனோ தாத்தா (எங்க அப்பா) கிட்ட போய் ”கை தட்டுங்க கை தட்டுங்க”ன்னு சொன்னா அவரும் கை தட்ட, திரும்பவும் சுத்தி ஒரு பார்வை பார்த்துட்டு கீதா பாட்டியைக் கூப்பிட்டா. கவனிக்கலைன்னதும் ”கீதா”ன்னு கூப்பிட்டு ”கை தட்டுங்க”ன்னு சவுண்டு விட்டா. அப்புறம் ஒரு வழியா எல்லாரும் கை தட்டினதும் ஒரு சிப் குடிச்சுட்டு மிச்சத்தை வழக்கம் போல சட்டைல ஊத்திக்கிட்டு ”அம்மா தண்ணி ஊத்திக்குச்சு பாப்பா சட்டை சட்டை”ன்னு கம்ப்ளைண்ட வேற.

எல்லாத்தையும் ஒழுங்கா செய்யிற என் பொண்ணுக்குத் தண்ணி குடிக்க வைக்கிற வித்தையை மட்டும் யாராவது சொல்லித் தாங்களேன், ப்ளீஸ்.

Tuesday, March 9, 2010

வேணாஆஆஆஆ சொல்லாத

கொஞ்சியவர்கள் (2)
நிலா ரெண்டு மாசம் இந்தியா போனதில் பெரிய மாற்றம் அவளது பேச்சு. நிறைய பேசக் கத்துக்கிட்டாங்க மேடம். ரியாத்ல நானும் அவங்க அம்மாவும் பேசறதையும் சில நேரத்தில் வீட்டுக்கு வரும் நண்பர்கள் பேசறதையும் மட்டுமே கேட்டு வளர்ந்தவங்களுக்கு ஏகப்பட்ட சொந்தங்களும் அக்கம்பக்கமும் பேசிப் பேசி - மேடம் ஓவரா பேசுறாங்க. எதைச் சொன்னாலும் திரும்ப சொல்றது, தானாகவே எதாவது பேசறதுன்னு ஆகிட்டாங்க. இப்பொவெல்லாம் ஒவ்வொரு வார்த்தையும் நாங்களே யோசிச்சு தான் பேச வேண்டியதா இருக்கு.

ரெண்டு மூணு நாளுக்கு முன்னால் சில நண்பர்கள் வந்திருந்த நேரத்திலே கோமதி நிலா கிட்டே “அம்மு, ஆய் போய்ட்டியா?” என்று கேட்க, மேடமுக்கு செம்ம கோபம் “வேணாஆஆஆஆஆஆ கேக்காத” என்று சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க. நேற்று ஒரு சின்ன டேபிள்ல மேலே ஏறி குதிச்சு விளையாடிக்கிட்டு இருந்தவங்க தவறி கீழே விழுந்துட்டாங்க. அவங்க அம்மா சும்மா இல்லாம “பார்த்து இறங்கும்மா” என்று சொல்ல, “வேணாஆஆஆஆ சொல்லாத” என்று கத்தல்.

இந்த ரெண்டு விஷயத்திலேயும் மேடம் முகமும், கத்தின கத்தலையும் பார்க்கிறப்போ “என்னை ஏன் இப்படி மத்தவங்க முன்னால மானத்த வாங்குறே”ன்னு கேக்குற மாதிரியே இருந்துச்சு. மேடம் பெரிய மனுஷி ஆகிட்டு வர்றாங்க.

Sunday, February 14, 2010

ஐ லல்லல்யூஊஊ

கொஞ்சியவர்கள் (3)
ஹலோ மாமாஸ், ஆண்ட்டீஸ், சித்தாஸ், பெரியப்பா, அக்கா, அண்ணா ஐ லல்லல்யூஊஊ

Sunday, December 27, 2009

நாட்டி நிலா

கொஞ்சியவர்கள் (24)
நிலாவைப் பற்றி யாராவது விசாரித்தாலே நான் சொல்லும் பதில் “நாளுக்கு நாள் வாலுத்தனம் அதிகம் ஆகிட்டு இருக்கு” என்பதாகவே இருக்கும். அவளது ஒவ்வொரு வாலுத்தனத்தையும் ரசிக்கும் முதல் ஆளாக நான் இருக்கேன். அம்மா தானே முதல்ல ரசிப்பாங்க, அதெப்படி அப்பா சொல்லிக்க முடியும்? சில நேரத்திலே நிலாவோட வாலுத்தனத்துக்கு அவங்க அம்மா டென்ஷன் ஆகுறாங்களே, அதனால அந்தப் பதவியை நானே எடுத்துக்கிட்டேன் (எப்பூடீஈஈ?). வீட்டில யாரும் ஃபோன் பேச முடியாது, இவங்க கைல ஃபோனைக் கொடுத்திடணும். இவங்க வாங்கி “ஹலோ, மம்மம் சாப்டியா” என்றெல்லாம் பொறுப்பா விசாரிப்பாங்க. மத்தவங்க மம்மம் சாப்பிட்டாங்களேன்னு விசாரிக்கிறியே, நீ ஒழுங்கா சாப்பிடுறியான்னு கேட்டா, அதுக்கு மட்டும் அழகா “வேணாம்மா” “வேணாம்ப்பா” சொல்லக் கத்துக்கிட்டாங்க.

அம்மாக்காரங்க புள்ளைக்கிட்டே டென்ஷன் ஆனாலோ சின்னதா அடிச்சாலோ (டையப்பரில் தான்) நமக்கு டென்ஷன் ஆகும். அதனாலேயே சில நேரத்திலே எங்களுக்குள்ள வாக்குவாதம் நடக்கும். ஆனா, கொஞ்ச நேரத்திலே அம்மாவும் பொண்ணும் இழைஞ்சுக்கறதைப் பார்த்தா “அடப்பாவிகளா, இதுக்காகவா நான் என்னோட எனர்ஜிய வேஸ்ட் பண்ணேன்”னு நினைக்கத் தோணும். நான் நிலா கிட்டே டென்ஷன் ஆக மாட்டேன், ஆனா அவ எதாவது தப்பு செய்யிறான்னா கொஞ்சம் மிரட்டுற மாதிரி பார்ப்பேன். உடனே மேடம் “ராஜாப்பா”ன்னு வந்து கட்டி பிடிச்சுப்பாங்க. அப்போ மட்டும் கேக்காமலே முத்தமெல்லாம் கிடைக்கும். அதுக்கு மேல எங்கேர்ந்து டென்ஷன் ஆகுறது? டென்ஷனெல்லாம் புஸ் ஆகி “இந்தக் கன்னத்துல” என்று மறுகண்ணத்தையும் காட்டி முத்தம் வாங்கிப்பேன். கூடவே “ஐ லவ் யூ” சொல்லுன்னு சொல்லி அவங்க பாஷைல ஒரு “ஐ லல் ல்லூ”வும் வாங்கிப்பேன்.

நைட்டுல எவ்ளோ நேரமானாலும் அவங்களா டயர்ட் ஆனா தான் தூங்க வைக்க முடியும். அதுவும் வெளிச்சத்தம் எதுவும் இல்லாம இருக்கணும், அநாவசிய வெளிச்சம் இருக்கக்கூடாது. “நிலா தூங்குடா” என்று சொன்னதுமே நல்லப்பிள்ளையா போய் பெட்டுல படுத்து தனக்குத் தானே “ரோரோ” தட்டிப்பாங்க. அட இப்படி ஒரு நல்லப்பிள்ளையான்னு ஆச்சர்யப்படுறிங்களா? அதான் இல்ல. அடுத்த செகண்டே எழுந்து உட்கார்ந்துப்பாங்க. அப்போ படுத்தது? அது நாம சொல்றதைக் கேட்டு நடந்துக்கிறாங்களாம். சரி அப்பாவும் தூங்குறேன் நிலாவும் தூங்கிடுங்கன்னு சொல்லிட்டுப் படுத்தா, அடுத்த நிமிஷம் வயித்து மேல ஏறி உட்கார்ந்துகிட்டு குதிரை ஓட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அதுவும் இப்போ எஜிப்ட் போய்ட்டு வந்ததுலேர்ந்து குதிரை சத்தத்தோட ஓடுது (அங்கே குதிரை வண்டில போனதுல இருந்து இப்போ குதிரை சத்தமும் போட ஆரம்பிச்சாச்சு)

அம்மாவும் பொண்ணும் மட்டுமா பகல் முழுக்க இருக்கிறதால அப்பப்போ கோமதி எதாவது புதுசு புதுசா சொல்லித் தர்றதா இருக்காங்க. இப்போ கொஞ்சம் கொஞ்சமா தமிழ், இங்க்லீஷ் ரைம்ஸ்ல ஒவ்வொரு வரியிலேயும் அவங்க பாதி சொல்ல நாம மீதி முடிக்கிற நிலைமைல இருக்கு. இல்லைன்னா நாம எடுத்துக்கொடுக்க அவங்க முடிக்கிற மாதிரி. நான் தான் பொண்ணுக்கு எல்லாம் சொல்லித் தர்றேன், நீ எதுவுமே சொல்லித் தர்றது இல்லைன்னு கோமதி என்கிட்டே குறை சொல்லாத நாளே இல்ல. சரி நம்மால முடிஞ்ச நல்ல காரியம் செய்வோம்ன்னு ஒரு நாள் நிலா அழறான்னு தூக்கி வச்சிக்கிட்டு “என்னம்மா பண்ணலாம், டிஸ்கோவுக்குப் போகலாம். வோட்காவப் போடலாம் ஓடிப்பாடி ஆடலாம்”ன்னு பாடினேன். இப்போ எம்பொண்ணு “டுமீலு டுமிலு”ன்னு நான் பாடினாலோ டிவியில் அந்தப் பாட்டின் வரி வந்தாலோ “டுமாங் டுமாங் ங்கொய்யா” என்று பாடுகிறாள்.

போன வாரம் நிலா மேடம் சென்னை போய்ட்டாங்க. அங்கே எல்லோர் கிட்டேயும் நல்லா ஒட்டிக்கிட்டாங்களாம். ஆனா, மேய்க்கிறது தான் பெரிய கஷ்டமா இருக்காம். வீட்டுலேயே சின்னப்பையன் என் மச்சான், அவனாலேயே முடியலையாம். அப்போ பெரியவங்க நிலைமை? ரகளை தான். அங்கே அவங்களுக்கு மனோ தாத்தா, பாட்டி, தாத்தா, ஆயா, மாமா, மாமி, அத்தை, அத்தாச்சி, அக்கம்பக்கம் ஆண்டீஸ், மாமாஸ்ல்லாம் நிறைய பேரு இருக்காங்க. ஆனா, இங்கே அப்பாவுக்கு? ஐ மிஸ் யூ டா குட்டிம்மா.

Tuesday, October 13, 2009

நிலாவின் துபாய் பயணம்

கொஞ்சியவர்கள் (10)
துபாய் போகணும்ன்னு எப்பவோ திட்டம் போட்டது, ஏதோ சில காரணங்களால தள்ளிப் போய்கிட்டே இருந்தது. எங்க நிலாக்குட்டி ரொம்ப லக்கி தான். ஒரு வயசிலேயே துபாய் சுத்திப் பார்க்கக் கிளம்பிட்டாங்க. நிலாவைக் கூட்டிக்கிட்டு டூர் போறோம்ன்னு ப்ளான் பண்ணப்போவே நம்ம ரொம்ப சுத்திப் பார்க்க முடியலைன்னாலும் ஓரளவுக்கு சுத்தி பார்க்கணும்ங்கிற மனநிலையோட தான் கிளம்பினோம். போர்டிங் முடிச்சு ஃப்ளைட்ல ஏறி உட்கார்ந்ததும் சீட்டையெல்லாம் பார்க்கதவளுக்கு என்ன ஞாபகம் வந்துச்சோ தெரியல “தாத்தா தாத்தா”ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டா. அப்போ தான் அவ இந்தியா போகப்போறோம்ன்னு நினைச்சிக்கிட்டான்னு புரிஞ்சுது. அப்புறம் தாத்தா இல்லடா, நாம மாமாவைப் பார்க்கப் போறோம்ன்னு சொல்லி அவளை கன்வின்ஸ் பண்ண கொஞ்ச நேரத்திலே ஒரு தூக்கத்தையும் போட்டுட்டா.

பொதுவாவே நிலாவுக்கு சுதந்திரமா சுத்தணும். சாப்பிடும்போது கூட சுத்திக்கிட்டே சாபிட்டா நல்லா சாப்பிடுவா. நல்லவேளையா ஆசிஃப் அண்ணனோட கடல் போல இருந்த வீட்டுல (துபாய்ல அது பெரிய வீடு தான்) தங்கினதால நிலாவைச் சமாளிக்க முடிஞ்சுது, ஹோட்டலெல்லாம் நினைச்சுக் கூடப் பார்க்க முடியலை. சகல வசதிகளோட அந்த வீட்டைக் கொடுத்த ஆசிஃப் அண்ணனுக்கு ரொம்ப நன்றி சொல்லணும். அவங்க வீட்டுல ஜாலியா சுத்தினது மட்டுமில்லாம கூடவே எல்லா பொருள்களையும் இழுத்து கீழே போட்டுக்கிட்டு என்ஜாய் பண்ணிக்கிட்டு இருந்தா. அதே மாதிரி வெளில சுத்தும்போதெல்லாம் தொல்லைக் கொடுக்காம ஜாலியா என்ஜாய் பண்ணா. வெள்ளைக்காரங்களுக்கெல்லாம் ஷேக் ஹாண்ட் கொடுத்து ஃப்ரண்டு பிடிச்சிக்கிட்டா. ஆனா, புது இடத்திலே தூங்குறதுக்கு இவ்ளோ படுத்துவான்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல (என்ன பண்றது, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் புது இடம்ன்னா தூக்கம் வராதே, அப்புறம் புள்ளை மட்டும் என்ன பண்ணும்).

நிலா பார்த்து என்ஜாய் பண்ணதுன்னா அது அங்கே இருந்த துபாய் ஷாப்பிங் மால்ல அக்வேரியம் போனப்போ தான். மீனையெல்லாம் கிட்டே பார்த்ததுல அவளுக்கு ரொம்பவே ஆச்சர்யம். கூட ஜெஸிலாவோட பொண்ணு ஃபாத்தீன் அவளுக்கு நல்ல கம்பெனி.

நிலாவுக்கு யாரைப் பார்த்தாலும் மாமா ஆண்ட்டின்னு சொல்லுன்னு சொல்லிக் கொடுத்தது தப்பாப் போச்சு. அவ இஷ்டத்துக்கு எல்லோரையும் மாமா, ஆண்ட்டி, பாட்டி, லேசா வெள்ளை முடி தெரிஞ்சா உடனே தாத்தான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டா. இங்கே சவுதியிலே பிரச்சனை இல்லை, ஏன்னா அவங்களுக்கு தமிழ் புரியாது. எனக்கு துபாய் போறோம்ன்னதும் முதல்ல பயம் வந்ததே அதுக்கு தான். அங்கே நிறைய தமிழர்கள் இருப்பாங்களே. அதனால அவளா யாரையாச்சும் பாட்டியோ தாத்தாவோ கூப்பிடுறதுக்கு முன்னாடி நான் ஆண்ட்டி, அங்கிள்ன்னு சொல்லிட்டா அவ அப்டியே கூப்பிடுவா. அப்படி தான் ஒரு வெள்ளைக்கார கிழவிய ஆண்ட்டின்னு நிலா கூப்பிடவும் அந்தம்மாவுக்கு சந்தோஷம் தாங்கல. கூடவே, அவங்க சொல்லிக்கொடுத்த மாதிரியெல்லாம் இவளும் செய்யவும் ஸ்மார்ட் கேர்ள்ன்னு பாராட்டினாங்க.

அதே மாதிரி, ஹோட்டல் சரவணபவன், நம்ம பிரபல பதிவர் குசும்பன் புண்ணியத்திலே ஆச்சி ரெஸ்டரண்ட் எல்லா இடத்திலேயும் சர்வரை எல்லாம் மாமான்னு கூப்பிட்டு அவங்க கிட்டே பாப்பாக்கு என்ன வேணும்ன்னு கேட்ட உடனே இட்லின்னு சொன்னதும் அவங்களுக்கும் ஆச்சர்யம் தாங்கல. மாமா மாமான்னு கூப்பிட்டதால ரொம்பவே குஷி ஆகிட்டாங்க. கடைசியா கிளம்புற அன்னைக்கு தௌ க்ரூஸ் போட்டிங் போணோம். அங்கே முழுக்க வெள்ளைக்காரங்க. மேடம் எல்லார் கிட்டேயும் தானா போய் ஷேக் ஹேண்ட்ல்லாம் கொடுத்து ஃப்ரண்ட் ஆகிட்டாங்க. இவ அவங்க அப்பா ஃபோனை வச்சிக்கிட்டு போட்ல போட்ட சீன் தாங்கலை. எல்லோரும் செம்மையா கமெண்ட் அடிச்சு சிரிச்சிக்கிட்டு இருந்தாங்க. ஆனா திரும்ப வந்ததும் என் வீட்டுக்காரர் மட்டும் அழுதுக்கிட்டு இருந்தார். ஹிஹிஹி வேற ஒண்ணுமில்ல, ஃபோனுக்கு ஆப்பு ஆகிடுச்சு. அந்த ஆப்பு முடிஞ்சு அடுத்த ஒரு வாரத்துல ஒரு பெரிய ஆப்பா வச்சிட்டா. நான் கிச்சன்ல ஏதோ எடுக்கப் போன நிமிஷத்துல லேப்டாப்பைப் பொறுப்பா கவுத்துப் போட்டு உஸ் (மூச்சா) அடிச்சுட்டா. அதனால தான் எப்பவோ டைப் பண்ணி வச்ச பதிவை போட முடியாம இவ்ளோ நாள் ஆகிடுச்சு (நெசமா தான் சொல்றேன், என்னை நம்புங்க). சரி, என்னோட புலம்பலை விடுவோம். நிலாவோட அடுத்த இண்டர்வியூக்கு போவோமா.....

1. கவிதா சொல்லு? (நேயர் விருப்பத்துக்காக)

2. ஐயப்பா சொல்லு? (நேயர் விருப்பத்துக்காக)

3. ஃபாத்தீன் அக்கா என்ன பாட்டுப் பாடுனாங்க?

ச்சூ ச்சூ மாயி

4. அறிவு மாமாக்கு என்னப் பாட்டுப் பிடிக்கும்?

பியா பியா ஓ பியா (சமீபத்துல நிச்சயம் ஆன எங்க அண்ணனோட ஆளு பேரு ப்ரியா. அவனை கலாய்க்கிறதுக்காக இந்த ட்ரைனிங். எப்பூடீஈஈ???)

5. அப்பா ஈ தேய்க்கும்போது எப்படி கத்துவாங்க?

உவ்வா

6. சித்தாவோட பேர் என்ன?

ப்ரபு

7. அத்தாச்சி பேர் என்ன?

காவ்யா

8.ஆயாவோட பேர் என்ன?

சல்வீஈஈஈ

9. பன்னீர் தாத்தா வந்தா பாப்பா என்ன சொல்லுவிங்க?

வாங்க (மத்த யாராவது வீட்டுக்கு வந்தா நாங்க கூப்பிடச் சொன்னா தான் வாங்கன்னு கூப்பிடுவா. ஆனா பன்னீர் தாத்தா வந்தா மட்டும் அவளாவே கூப்பிடுவா)

10. பாப்பாவைக் குளிக்கச் சொன்னா எப்படி அழும்?

ம்ஹ்ம் ம்ஹ்ம்

11. பாப்பா எப்படி சிரிப்பிங்க?

ஈ ஈஈ ஈஈ

12. பாப்பாவுக்கு எப்படி கோபம் வரும்?

ஆ...ப்

13. பாப்பாவோட செருப்பு எப்படி கத்தும்?

கீன் கீன்

14. பாப்பாக்கு எத்தனை இட்லி வேணும்?

டூ த்தீ (எது கேட்டாலும் டூ த்தீ தான்)

15. ரக்‌ஷிதா பாப்பா நிலாவை எப்படி கூப்பிடுவா?

நிலா அக்கா (இங்கே நிலாவை விட மூணு மாசம் சின்னக்குழந்தை தான் ரக்‌ஷிதா. சும்மா ஒரு நாள் விளையாட்டா ரக்‌ஷிதா உன்னை நிலா அக்கான்னு கூப்பிடுவாடான்னு சொன்னதோட விளைவு)

Get this widget | Track details | eSnips Social DNA


பின்குறிப்பு: நிலாவுக்கு துபாய்ல எடுத்த ஃபோட்டோல்லாம் பார்க்கிறதுன்னா அவ்ளோ சந்தோஷம். முக்கியமா ஃபாத்தீன் அக்கா பார்க்கிறதுல தான் குஷி அதிகம். ஃபாத்தீன் அக்கா ஃபாத்தீன் அக்கான்னு சொல்லிக்கிட்டே இருப்பா. ரெண்டு நாள் முன்னாடி ஒரு சூப்பர் மார்கெட்ல ஃபாத்தீன் சைஸ்ல ஒரு பொண்ணைப் பார்த்துட்டு ஃபாத்தீன் அக்கா ஃபாத்தீன் அக்கான்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டா. அது ஃபாத்தீன் அக்கா இல்லைடான்னு சொன்னாலும் அவ கடைசி வரைக்கும் நம்பல. எத்தனையோ பேரைப் பார்த்திருந்தாலும் குழந்தைகளுக்கு குழந்தைகள் தாங்க அவங்க மனசுல நிக்கிறாங்க!

Tuesday, September 15, 2009

நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் புதுப்பொலிவுடன் - நிலாக்காலம்

கொஞ்சியவர்கள் (20)
ஊருக்குப் போனதுல நிலாவோட பல இனிமையான நினைவுகளைப் பகிர்ந்துக்க முடியாம போனதுல எனக்கு கொஞ்சம் வருத்தம் தான். என்ன தான் நான் இப்போ அதைச் சொன்னாலும் சுடச்சுட அந்தந்த விஷயங்களை பகிர்ந்துக்கும்போது கிடைக்கிற சுவாரசியமே தனி தான். அதே மாதிரி இந்த நீண்ட இடைவெளில சில பல நிகழ்வுகளை நான் மறந்தும் போயிருக்கலாம்.

குட்டிநிலாவைப் பத்தி சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கு. இப்போல்லாம் அவளோட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. கூடவே கொஞ்சம் கஷ்டமாவும் இருக்கு. மேடம் ஒரு நிமிஷம் சும்மா இருக்கிறது இல்லை. ரொம்ப வாலுத்தனம் பண்றாங்க.

ஊருக்குப் போனதும் நிலா முதல்ல கொஞ்சம் நிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் 2 அல்லது 3 அடி வச்சு நடக்க ஆரம்பிச்சு டமால் டமால்ன்னு விழுவாங்க. தாத்தா நடைவண்டி வாங்கி கொடுத்ததும் அவ முகத்துல தான் எவ்ளோ சந்தோஷம். என்னமோ அவ ஒரு பெரிய கார் ஓட்டிட்டு வர்ற மாதிரி ஒரு ஃபீலிங். எப்போ பாரு நடைவண்டி தான். அதை ஓட்டுறதுன்னா அவ்ளோ சந்தோஷம். நிறைய சமயம் டின்னர் ஊட்டிவிட எனக்கு நடைவண்டி தான் உதவி பண்ணிருக்கு. இப்படி சில மாசத்துக்கு முன்னாடி இங்கேயும் அங்கேயும் வேகமா தவழ்ந்துகிட்டு இருந்த நிலா இப்போ என்னடான்னா ததக்கா பிதக்கான்னு நடக்குறா, ஓடுறா. யப்பாஆஆஆஆஆஆ முடியலலலலலலலலலலலலலல. நிலாவோட ஒவ்வொரு விஷயங்களையும் புகைப்படம் மற்றும் வீடியோவா பதிவு பண்ண நினைச்ச நாங்க அவ ஊர்ல உடம்பு முடியாம சோர்வா இருந்ததால அவ நடக்க ஆரம்பிச்சதெல்லாம் பதிவு பண்ண முடியாமலே போய்டுச்சு.

இப்போ நிலாக்குட்டிகிட்டே தான் எவ்ளோ மாற்றம்!! நாம எது பேசினாலும் அவங்களும் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்ல முயற்சி பண்றாங்க. நானும் என் வீட்டுக்காரரும் இனிமே கிண்டலுக்கு கூட அவ முன்னாடி திட்டிக்க வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டோம். மழலைச்சொல்ன்னு கேள்விப்பட்டிருக்கோம். அதையெல்லாம் தாண்டி நிலா சில வார்த்தைகளை ரொம்ப அழகா திருத்தமா சொல்றது ஆச்சர்யமா தான் இருக்கு.

நிலாவோடு ஒரு குட்டி இண்டர்வியூ (இதோட ஆடியோ கீழே)

1. பாப்பாவோட பேர் என்னம்மா?

ந்நிலாஆஆ

2. பாப்பாவோட அப்பா பேர் என்னம்மா?

ஆஜ்ஜா (அம்மா பேரை கேக்கக்கூடாது. சொல்றது ரொம்ப கஷ்டம். எல்லாம் சொல்லிக்கொடுத்தேன், என் பேரைச் சொல்ல மாட்டேங்குறியே நிலா)

3. அப்பா எங்கேம்மா போய்ருக்காங்க?

ஆசீஸ் (ஆஃபீஸ்)

4. பாட்டி பேர் என்னம்மா?

கீத்தா

5. பாப்பாக்கு என்ன புடிக்கும்?

இட்ட்ட்லீ

6. பாப்பா ஒன் டூ த்ரீ சொல்லுங்க?

ஒன் (மட்டும் நாம சொல்லணும்) டூ த்தீ

7. பாப்பா ஒரு பாட்டுப் பாடுங்க?

சா, தீஈஈஈ (தொடையில் தாளத்துடன்), க (நாம சொல்லணும்), ம, பா (அவ்ளோ தான்)

8. காக்கா எப்படி கத்தும் (கொஞ்சம் கிறுக்குத்தனமான கேள்வி தான்)?

கா கா

9. மாடு எப்படி கத்தும்?

மாஆஆஆ

10. பூனை எப்படி கத்தும்?

ய்யாஆஆவ்வ்வ்வ்

11. நாய் எப்படி கத்தும்?

வவ் வவ்

12. குரங்கு எப்படி கத்தும்?

கொர்ர்ர்ர்ர்

13. கோழி எப்படி கத்தும்?

கொக்ககொகோ

இதெல்லாம் இல்லாம நிலா மழலையோட சொல்லும் சில வார்த்தைகள்

1. பூயி (பூரி)
2. ம்ம்மை (பொம்மை)
3. ண்ண்ணீ (தண்ணி)
4. சாயி (சாரி)
5. காங்க் யூ (தாங்க் யூ - இது அவ சொல்றப்போ எனக்கு ரொம்பப் பிடிக்கும்)
6. மாயீ (மாமி)
7. டை (வடை)
8. ச்சாக்கி (சாக்லேட்)
9. க்க்கர் (குக்கர்)
10. ஜூஊஊஸ் (ஜூஸ்)
11. தச்சு (தயிர்)
12. ண்ண்ணா (அண்ணா)
13. க்க்கா (அக்கா)


அம்மா, அப்பா, தாத்தா, மாமா, பாட்டி, டாடி, பால், பால் (ball), பாட்டில், சட்டை இதெல்லாம் ரொம்ப க்ளியரா வர்ற வார்த்தைகள். நிலா இந்த ரெக்கார்டிங்கு அப்புறம் இன்னும் நிறைய பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதெல்லாம் கூடிய விரைவில் அடுத்தப் பதிவாக.

Get this widget | Track details | eSnips Social DNA
 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez