Monday, March 15, 2010

நாட்டி நிலா 15-03-2010

கொஞ்சியவர்கள் (6)
பொதுவாவே எழுதுறதுனா எனக்கு ரொம்ப சோம்பேறித்தனம். என் தோழிகள், என் கணவர் எல்லாருமே கடிதம் எழுதுன்னு சொல்லி கேட்டுருக்காங்க. ஆனால் நான் இதுவரைக்கும் எழுதுனதே இல்லை. அப்படிப்பட்ட என்னையை நம்பி இவங்க அப்பாவும் ப்ளாக் ஆரம்பிச்சுட்டார். அதுக்காகவாவது எழுதித் தானே ஆகணும். எழுதுறேன்.

எங்க குட்டி நிலா ரொம்பவே பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் ஊருக்கு போனதுக்கு அப்புறம் நிறைய வார்த்தைகள் சுலபமா வர ஆரம்பிச்சிடுச்சி. அவங்களோட லூட்டியை கொஞ்சம் பார்ப்போமா?

என் தம்பியும் நிலாவும் எப்பவும் விளையாடிட்டு இருப்பாங்க. அவன் நிலா ஒடுனா அவ கையைப் பிடிச்சிப்பான். அவ ”கை கை”ன்னு கத்துவா. நான் உடனே அவனைத் திட்டுவேன் ”ஏன் குழந்தை கையை பிடிக்குற, பிஞ்சு கை டா அது”ன்னு சொல்லுவேன். இதுமாதிரி இரண்டு சமயம் நடந்துச்சு. அப்புறம் ஒரு நாள் மேடம் அவங்களா அவன்கிட்ட கையை கொண்டு போய் வேணும்னே கொடுத்துட்டு ”அம்மா கை கை”ன்னு கத்துனா. நான் அவனை திட்டினவுடனே ”பிஞ்சு கை டா இது”ன்னு இவங்களே சொல்ல நாங்கல்லாம் சிரிக்க என் தம்பியோ ”இந்த வயசுலயே என்ன வில்லங்கம் பாரு அதுவா கையை கொடுத்துட்டு என்ன டயலாக் விடுது”ன்னு புலம்பினான்.

*************************************************

ஓரு நாள் குளிப்பாட்டிட்டு இருக்கும் பொழுது கால்ல சோப்பு போட்டுட்டு இருக்கேன் “அம்மா விழுந்துட போறேன்மா”ன்னு சொன்னா. என்னடான்னு திரும்ப கேட்டப்போ “பாப்பா விழுந்துட போறேன்மா பார்த்து மா”ன்னு சொன்னா ”பாப்பா விழ மாட்ட டா அம்மாவைப் பிடிச்சிக்க்கோ”ன்னு சொன்னதும் தான் அமைதி ஆனாங்க.

*************************************************

ஓரு வாரம் முன்னாடி தமிழ் ரைம்ஸ் CD கேட்டுட்டு இருந்தோம் அதுல “கரடி மாமா” பாட்டு ஓடுச்சு. கொஞ்ச நேரம் கழித்து ஒரு நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போ நான் நிலாவைக் குளிப்பாட்ட கூட்டிட்டுப் போயிட்டேன். நிலா அவளா பாட்டு பாடுனா “கரடி மாமா கரடி மாமா எங்கே போறீங்க?” திடீர்னு என்ன தோணுச்சோ தெரியலை “பன்னீர் தாத்தா பன்னீர் தாத்தா எங்கே போறீங்க? காட்டுப்பக்கம் வீடிருக்கு அங்கே போறேங்கன்னு” அதே மெட்டோட பாட ஆரம்பிச்சுட்டா. எனக்கு சிரிப்பு தாங்கலை. நல்ல வேளையாக அந்த நண்பர் காதுல விழலை.

*************************************************

ஒரு நாள் அவளோட பைல இருக்குற குட்டிக் குட்டிப் புத்தகத்தை எல்லாம் திடீர்னு வேக வேகமா எடுத்து கொஞ்சம் அங்கயும் இங்கயுமா கொட்டுனா. எனக்கு ஒண்ணும் புரியலை. ”என்ன டா செய்றே”ன்னு கேட்டேன். ஒரு நீட்டு துடைப்பத்தை எடுத்துட்டு வந்து ”அம்மா கூட்டி செய்றேன்மா”ன்னு புத்தகத்தையும் சேர்த்து பெருக்குறாங்க. ”முடியலை டா சாமி”ன்னு நினைச்சுக்கிட்டேன்.

*************************************************

நிலாவுக்கு உடம்பு சரி இல்லாம இருந்தப்போ அடிக்கடி மருத்துவமனை போக வேண்டி இருந்தது. மருத்துவமனை போனதுமே அவங்க முகம் லேசா மாறும். டாக்டர் ரூமுக்கு போனதுமே அழுகை ஆரம்பிச்சுடும். அப்படி தான் ஒரு நாள் அழுதுகிட்டு இருந்தா. நான் ”டாக்டர் தாத்தா ரூம்ல சாமி இருக்கு பாருடா”ன்னு சொன்னதும் உடனே இவங்க கையைக் கூப்பி ”பெருமாள் சாமி காப்பாத்து”ன்னு அழுதுகிட்டே சொல்ல, டாக்டரே சிரிக்க ஆரம்பிச்சுட்டார்.

*************************************************

குட்டி நிலா இப்போல்லாம் எனக்கு உதவி பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. ஒரு நாள் துணி மடிச்சுட்டு இருந்தேன். அவளும் அங்கே வந்தா. சரின்னு அவங்க அப்பாவோட சாக்சை எல்லாம் எடுத்து ”ஒரு பைல போடு”ன்னு சொல்லி அவக்கிட்ட கொடுத்தேன். அவளும் பொறுப்பா எடுத்து அழகா போட்டா. எனக்கே ஆச்சர்யம் தாங்கலை. ”பாப்பா அம்மாவுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணிங்க தாங்க்யூ டா செல்லம், ஐ லவ் யூ டா செல்லம்”னு சொல்லி ஒரு குட்டி ஜெம்ஸ் சாக்லேட் கொடுத்தேன். அவளும் ”தாங்க்யூ”ன்னு வாங்கிக்கிட்டா. அடுத்த நாள் ஹாலை சுத்தம் செஞ்சுட்டு இருந்தேன். அவளும் கூட வந்து பொம்மையலாம் எடுத்து வச்சா. ”தாங்க்யூ டா செல்லம் அம்மாக்கு ஹெல்ப் பண்ணதுக்கு”ன்னு சொன்னவுடனே ”அம்மா சாக்கி”ன்னு கையை நீட்டுறாங்க.

*************************************************

நிலா ”பசங்க” படத்துல வர்ற அன்புக்கரசு IAS மாதிரி தான். எது செஞ்சாலும் அவங்களுக்குக் கை தட்டணும். பாராட்டு ரொம்ப முக்கியம். அவங்களே சில சமயம் ”வெரி குட்”னு சொல்லிப்பாங்க. அவகிட்ட ரொம்ப மல்லுக்கட்ட வேண்டியதுனா தண்ணி குடிக்க வைக்க தான். அதுவும் டம்ளரில் குடிக்க வைக்குறதுன்னா ரொம்பவே கஷ்டம். இப்பவும் அவளுக்கு டம்ளரில் குடிக்கத் தெரியாது. விளையாட தான் செய்வா. ஒரு நாள் எல்லாரும் கை தட்டுறோம் நீ தண்ணி குடின்னு நான். என் அண்ணன், தம்பில்லாம் சொன்னவுடனே ஆர்வமா வாங்கிக்கிட்டாங்க. வாங்கிக்கிட்டு வாய்ல வைக்க போனவ சீரியஸா டி.வி பார்த்துட்டு இருந்த மனோ தாத்தா (எங்க அப்பா) கிட்ட போய் ”கை தட்டுங்க கை தட்டுங்க”ன்னு சொன்னா அவரும் கை தட்ட, திரும்பவும் சுத்தி ஒரு பார்வை பார்த்துட்டு கீதா பாட்டியைக் கூப்பிட்டா. கவனிக்கலைன்னதும் ”கீதா”ன்னு கூப்பிட்டு ”கை தட்டுங்க”ன்னு சவுண்டு விட்டா. அப்புறம் ஒரு வழியா எல்லாரும் கை தட்டினதும் ஒரு சிப் குடிச்சுட்டு மிச்சத்தை வழக்கம் போல சட்டைல ஊத்திக்கிட்டு ”அம்மா தண்ணி ஊத்திக்குச்சு பாப்பா சட்டை சட்டை”ன்னு கம்ப்ளைண்ட வேற.

எல்லாத்தையும் ஒழுங்கா செய்யிற என் பொண்ணுக்குத் தண்ணி குடிக்க வைக்கிற வித்தையை மட்டும் யாராவது சொல்லித் தாங்களேன், ப்ளீஸ்.

Tuesday, March 9, 2010

வேணாஆஆஆஆ சொல்லாத

கொஞ்சியவர்கள் (2)
நிலா ரெண்டு மாசம் இந்தியா போனதில் பெரிய மாற்றம் அவளது பேச்சு. நிறைய பேசக் கத்துக்கிட்டாங்க மேடம். ரியாத்ல நானும் அவங்க அம்மாவும் பேசறதையும் சில நேரத்தில் வீட்டுக்கு வரும் நண்பர்கள் பேசறதையும் மட்டுமே கேட்டு வளர்ந்தவங்களுக்கு ஏகப்பட்ட சொந்தங்களும் அக்கம்பக்கமும் பேசிப் பேசி - மேடம் ஓவரா பேசுறாங்க. எதைச் சொன்னாலும் திரும்ப சொல்றது, தானாகவே எதாவது பேசறதுன்னு ஆகிட்டாங்க. இப்பொவெல்லாம் ஒவ்வொரு வார்த்தையும் நாங்களே யோசிச்சு தான் பேச வேண்டியதா இருக்கு.

ரெண்டு மூணு நாளுக்கு முன்னால் சில நண்பர்கள் வந்திருந்த நேரத்திலே கோமதி நிலா கிட்டே “அம்மு, ஆய் போய்ட்டியா?” என்று கேட்க, மேடமுக்கு செம்ம கோபம் “வேணாஆஆஆஆஆஆ கேக்காத” என்று சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க. நேற்று ஒரு சின்ன டேபிள்ல மேலே ஏறி குதிச்சு விளையாடிக்கிட்டு இருந்தவங்க தவறி கீழே விழுந்துட்டாங்க. அவங்க அம்மா சும்மா இல்லாம “பார்த்து இறங்கும்மா” என்று சொல்ல, “வேணாஆஆஆஆ சொல்லாத” என்று கத்தல்.

இந்த ரெண்டு விஷயத்திலேயும் மேடம் முகமும், கத்தின கத்தலையும் பார்க்கிறப்போ “என்னை ஏன் இப்படி மத்தவங்க முன்னால மானத்த வாங்குறே”ன்னு கேக்குற மாதிரியே இருந்துச்சு. மேடம் பெரிய மனுஷி ஆகிட்டு வர்றாங்க.
 

Designed by Ipiet | All Image Presented by Tadpole's Notez